பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 721 கனஅடி
ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 721 கனஅடியாக உள்ளது.
ஈரோடு,
தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் கொள்ளளவு 105 அடியாகும். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த சனிக்கிழமை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை இந்த மாதத்தில் 2வது முறையாக முழு கொள்ளளவான 105 அடியை மீண்டும் எட்டியது.
தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களான கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பாளையம் மற்றும் மேவாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கரையோர பகுதி கிராம மக்கள் கரையோர பகுதியில் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் பரிசல் இயக்க வேண்டாம் எனவும் வருவாய் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 105 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும், அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 721 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 4 ஆயிரத்து 720 கனஅடியாகவும் உள்ளது.
Related Tags :
Next Story