திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி தமிழகத்துக்கு மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசிடம் விண்ணப்பம்


திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி தமிழகத்துக்கு மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசிடம் விண்ணப்பம்
x
தினத்தந்தி 20 Nov 2019 4:45 AM IST (Updated: 20 Nov 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு மேலும் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் கேட்டு மத்திய அரசிடம், தமிழக அரசு விண்ணப்பித்து இருக்கிறது. இது நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் அமைய உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 24 அரசு மருத்துவ கல்லூரிகள், 10 சுயநிதி கல்லூரிகள் மற்றும் 10 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. இந்த நிலையில் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்தியா முழுவதும் 75 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதற்கான பணிகளும் நடந்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சுகாதாரத்துறை தொழில்நுட்ப குழு கூட்டத்தில் 75 புதிய மருத்துவ கல்லூரிகளில் முதற்கட்டமாக அமைய உள்ள மருத்துவ கல்லூரிகள் குறித்த பட்டியல் வெளியானது. அதில் தமிழகத்துக்கான கல்லூரிகள் பட்டியலும் இடம்பெற்று இருந்தன.

6 மருத்துவ கல்லூரிகள்

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (அக்டோபர்) 24-ந் தேதி தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் தமிழகத்தில் தலா ரூ.325 கோடி செலவில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

புதிதாக தொடங்கப்படும் இந்த கல்லூரிகள் மூலம் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் 4,250 ஆக உயர்ந்து இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் மாநில சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சுகாதாரத்துறை விண்ணப்பம்

ஏற்கனவே உள்ள 24 மருத்துவ கல்லூரிகளுடன், தற்போது புதிதாக அறிவித்த 6 கல்லூரிகளை சேர்த்து மொத்தம் 30 அரசு மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி இருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசிடம் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் கேட்டு தமிழக அரசு விண்ணப்பித்து இருக்கிறது.

அந்த வகையில் திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. அவற்றில் நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி கேட்டு மாநில சுகாதாரத்துறை விண்ணப்பித்துள்ளது.

மருத்துவ இடங்கள் அதிகரிக்கும்

இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய சுகாதாரத்துறை தொழில்நுட்ப கமிட்டியிடம், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வழங்கி இருக்கிறார்.

அந்த ஆவணங்களுடன் 3 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க கோரிக்கை வைப்பதற்கான காரணம் குறித்தும், அதனால் மக்கள் எப்படி பயன் பெறுவார்கள்? என்பது குறித்தும் குறிப்பிட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் மாநில சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் அமையும் பட்சத்தில் மேலும் 450 மருத்துவ இடங்கள் அதிகரிக்கும்.

Next Story