நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் தமிழக அரசு அவசர சட்டம்


நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் தமிழக அரசு அவசர சட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2019 5:45 AM IST (Updated: 21 Nov 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மாநகராட்சிமேயர்களை இனி கவுன்சிலர்களே தேர்வு செய்வார் கள். இதேபோல் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன.

உள்ளாட்சி தேர்தல்

மேலும் மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் என ஏராளமான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் இதுவரை அவற்றின் உறுப்பினர்களை போல நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அதாவது மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டு மேயரையும், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களையும் தேர்ந்தெடுத்து வந்தனர்.

விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு அவசர சட்டம்

இந்தநிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மறைமுகமாக தேர்ந்தெடுக்க வகை செய்யும் அவசர சட்டத்தை நேற்று தமிழக அரசு பிறப்பித்தது. அதாவது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பதற்கு பதிலாக, கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள்.

இதேபோல் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வார்கள்.

இதுகுறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட அவசர சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேயரை தேர்வு செய்யும் கவுன்சிலர்கள்

தமிழக அரசின் சட்டசபை தற்போது நடக்கவில்லை. எனவே தற்போது எழுந்துள்ள சூழ்நிலையின்படி, உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது அவசியமாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு நகராட்சி சட்டத்தை திருத்தி, அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்த அவசர சட்டம், ‘தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (5-வது திருத்தம்) அவசர சட்டம்-2019’ என்று அழைக் கப்படும். அதன்படி, மாநகராட்சி மேயரை, சாதாரண முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள், முதல் கூட்டத்தில் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகிப்பார். அவர் கவுன்சிலர் பதவியிலும் நீடிக்க முடியும்.

நகராட்சி தலைவர்

மேலும், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி, நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களில் ஒருவரை முதல் கூட்டத்தில் நகராட்சி தலைவராக கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அவர் நகராட்சி தலைவராக செயல்படுவார். அவரது கவுன்சிலர் பதவி நிறுத்தப்படாது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், ஒவ்வொரு குழு கூட்டத்திலும் உறுப்பினராகவும் செயல்படுவார்.

விளக்கம்

இந்த மறைமுக தேர்தல் தொடர்பாக விளக்கமும் அளிக்கப்பட வேண்டியதுள்ளது.

அதன்படி, மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் கட்சி ரீதியாக போட்டியிட்டு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கிராம ஊராட்சிகள் தவிர மற்ற ஊரக உள்ளாட்சிகளில் கட்சி ரீதியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் கவுன்சிலர் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கான தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்கிறார்கள்.

ஒத்துழைப்பு கிடைப்பதில்லை

மாநகர மேயரை பொறுத்தவரை, அவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், கவுன்சிலர்களில் பெரும்பான்மையானவர்கள் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மேயருக்கு தகுந்த ஒத்துழைப்பு கிடைப்பது இல்லை. இதனால் மாநகராட்சி செயல்பாட்டில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

மாநகராட்சி மன்ற கூட்டங்கள் கூட ஒழுங்கான இடைவெளியில் நடக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய சேவையில் தடங்கல் ஏற்படுகிறது.

மக்கள் நலப்பணிகள்

எனவே மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை அந்தந்த கவுன்சிலர்களே தேர்ந்தெடுத்தால், ஒரு நிலையான மற்றும் கூட்டுப் பொறுப்பு கவுன்சிலர்களுக்கு இருக்கும். அவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நிலைத்து பணியாற்றுவார்கள்.

சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் இடமும், கோவை, மதுரை மாநகராட்சிகளில் தலா 100 கவுன்சிலர்கள் இடமும் உள்ளன. இவை பெரிய மாநகராட்சிகள் என்பதால், இங்கு மக்கள் நலப்பணிகள் அதிகமாக இருக்கும். எனவே இங்கு மாநகராட்சி மன்ற கூட்டங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடப்பது அவசியமாகும்.

ஆதரவை கருதி...

எனவே மக்கள் நலன் கருதியும், பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவை கருதியும், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் நிலை, அதாவது மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக கவுன்சிலர்களே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே அதற்கேற்றபடி இந்த சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story