அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் சேலத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வில் 1985-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த காலகட்டத்தில் கட்சியின் சட்டவிதிகளை மதித்து கட்சியை வழிநடத்தினர். பொதுச்செயலாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டால் முறைப்படி பொதுக்குழுவை கூட்டி உட்கட்சித் தேர்தலை நடத்திய பின்னரே பொதுக்குழுவை நடத்தினார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்த சட்டவிதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் கட்சி வழிநடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு உறுதியளித்தபடி இதுவரை உட்கட்சித் தேர்தலை நடத்தவில்லை. பதவி அதிகாரம் படைத்தவர்களின் கையில் தற்போது கட்சி சிக்கியுள்ளதால் தவறான பாதையில் கட்சி வழிநடத்தப்பட்டு வருகிறது
பொருளாளர் பதவியும் முறைப்படி தேர்வு செய்யப் படவில்லை என்பதால், கட்சி நிதியிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. தற்போதுள்ள நிர்வாகிகள் அ.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியை மற்றொரு தேசிய கட்சியிடம் ஒப்படைக்க முயற்சித்து வருகின்றனர். அதை தடுத்து கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொண்டர்களுக்கு உள்ளது.
இந்த சூழ்நிலையில் வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கூட்ட கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். எனவே, உட்கட்சி தேர்தலை நடத்தும் வரை பொதுக்குழுவை கூட்டக்கூடாது, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல உட்கட்சி தேர்தலையும் முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு நேற்று விசாரித்தார். பின்னர் நீதிபதி, மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக சிவில் வழக்குதான் தொடர முடியும் என்பதால் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக கூறினார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல், வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story