தொடர் மழை: தமிழகத்தின் முக்கிய 15 அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு


தொடர் மழை: தமிழகத்தின் முக்கிய 15 அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 2 Dec 2019 5:59 PM IST (Updated: 2 Dec 2019 7:38 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் மற்றும் பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம் கனமழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது.

சென்னை,

பொதுப்பணித்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில்,  தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 14,098 ஏரிகளில், 2144 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், 927 ஏரிகளில் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும், 676 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் தெரிவித்து உள்ளார்.

அதாவது, சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளுக்கு கடந்த 2015ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, அவரது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, அந்த நல்ல செய்தி என்னவென்றால், அடுத்த ஆண்டு சென்னைவாசிகளுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்பதே.

பூண்டி (35% நிரம்பியுள்ளது)  - 3000 கன அடி நீர்
புழல் (55% நிரம்பியுள்ளது)  - 2200 கன அடி நீர்
செம்பரம்பாக்கம் (25% நிரம்பியுள்ளது) 2000 கன அடி நீர்
வீராணம் (நிரம்பி வழிகிறது) - 5700 கனஅடி நீர்
சோழவரம் (12% நிரம்பியுள்ளது)  - 500 கன அடி நீர்

வழக்கமாக டிசம்பர் மாதம் 31ம் தேதி, சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 6500 - 7000 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தால் நமது தேவைக்கு போதுமானது என்ற நிலையில், தற்போது 5 ஏரிகளிலும் 5200 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

இன்றும், நாளையும் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்றும், கிருஷ்ணா நதிநீர் வரத்தும் இதனுடன் சேர்ந்தால் நிச்சயம் ஏரிகளில் 6500 - 7000 மில்லியன் கன அடி நீர் இருப்பை எளிதாக அடைந்து விடுவோம். 

ஆனால், இதைத் தவிர்த்து தேவையற்ற புரளிகள் தற்சமயம் பரவி வருகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம்.

2015ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு முதல் முறையாக தமிழகம் இந்த வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஒட்டுமொத்தமாக 40 செ.மீ. மழையை பதிவு செய்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய மழை அளவு 43 செ.மீ.  ஒருவேளை இன்னும் இருக்கும் 28 நாட்களில் இந்த இயல்பு அளவையும் நாம் எட்டிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

Next Story