"நான் கண்டுபிடித்தது பெரிய ராக்கெட் அறிவியல் இல்லை" - விக்ரம் லேண்டரை கண்டறிந்த சண்முக சுப்பிரமணியன்
நான் கண்டுபிடித்தது 'பெரிய ராக்கெட் அறிவியல் இல்லை' 2 கம்ப்யூட்டர், 30 மணி நேர முயற்சி தான் விக்ரம் லேண்டரை கண்டறிந்தது என சண்முக சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
சென்னை,
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்க முயன்றது.
செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் 2 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் போது கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது லேண்டருக்கும், இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் போது இரவு முழுவதும் விழித்திருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களில் சண்முக சுப்பிரமணியனும் ஒருவர். தரையிறங்கும் போது லேண்டர் தொடர்பை இழந்த போது மனம் உடைந்தவர்களில் அவரும் ஒருவர்.
சண்முக சுப்பிரமணியன் மதுரையை சேர்ந்தவர் ஆவார். திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ளார். விண்வெளி அறிவியலில் ஆர்வம் உள்ளவர்.
33 வயதாகும் சண்முக சுப்பிரமணியன், நிலவை சுற்றிவரும் நாசாவின் மறுமலர்ச்சி ஆர்பிட்டரின் புகைப்படங்களை ஆய்வு செய்து, விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்து நாசாவுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதை தொடர்ந்து ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சந்திரயான் -2 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் பாகங்களை முதன்முதலில் கண்டுபிடித்ததாக சண்முக சுப்பிரமணியனுக்கு பெருமை கொடுத்து உள்ளது.
இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மீடியாக்களில் பேசப்படும் நபரானார் சண்முக சுப்பிரமணியன். இதை தொடர்ந்து இன்று காலை நிருபர்கள் அவரது வீட்டில் குவிந்தனர்.
விக்ரம் லேண்டரை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் என்ற நிருபர்களின் கேள்விக்கு,
தான் செய்தது ராக்கெட் அறிவியல் அல்ல. இரண்டு கம்ப்யூட்டர், 30 மணிநேர முயற்சியின் மூலம் தான் விக்ரம் லேண்டர் பாகங்களை கண்டிபிடித்தேன் என கூலாக கூறினார்.
மேலும் சுப்பிமணியன் கூறியதாவது:-
ஆரம்பத்தில் எவ்வாறு ஆய்வு செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், பின்னர் விக்ரம் லேண்டரின் தரையிறங்கும் தளத்தைக் கண்டுபிடித்து, அருகிலுள்ள மேற்பரப்பின் வேறுபாடுகளைப் பார்க்கத் தொடங்கினேன்.
நான் கண்டறிந்த சில வேறுபாடுகள் கற்பாறைகளாக மாறியது. சந்திர மேற்பரப்பில் உள்ள இயற்கை பொருட்களின் பிரதிபலிப்புகள் பிரகாசமாக இருக்கும் என்பதை நான் அறிந்து கொண்டேன் . இதை தொடர்ந்து பிற தவறான நேர்மறைகளை நிராகரிக்க அந்த தகவலைப் பயன்படுத்தினேன்.
நான், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக எனது நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது, நான் அலுவலகத்திற்குச் சென்று அவர்களை கிண்டல் செய்யலாம்.
சந்திரயான்-2 ஆர்பிட்டரின் படம், எல்.ஆர்.ஓ.வின் படத்தை விட மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்டது. நாசாவை போன்று புகைப்படங்களை இஸ்ரோவும் பகிரங்கப்படுத்தினால், அது என்னைப் போன்ற அதிக ஆர்வலர்கள் ஈடுபட உதவும். மேலும் சில சிறிய வழிகளில் ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்க கூடும் என கூறினார்.
Related Tags :
Next Story