சுவர் இடிந்து 17 பேர் பலி: வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சுவர் இடிந்து 17 பேர் பலி: வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Dec 2019 4:00 AM IST (Updated: 4 Dec 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

பலியான 17 பேர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதாது வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ள, எவருடைய இதயத்தையும் உலுக்கிடும், கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு, 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனிக்கு அருகில் தனியார் ஒருவர், தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்தில் 80 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார். இந்தச் சுவர், உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் அந்த வீட்டின் உரிமையாளரிடமே சொல்லி இருக்கிறார்கள். அவர் ஆவன செய்யாத நிலையில், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்துள்ளார்கள்.

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்த சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ நடவடிக்கை எடுக்கவில்லை; பிரச்சினையை காதில்கூடப் போட்டுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி இருக்கிறார்கள்.

“அந்த சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்” என்று, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காவல்துறை, இறந்த உடல்களை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளது. பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் வைத்திருக் கிறார்கள்.

“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று, கோவை-நீலகிரி நெடுஞ்சாலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. “3 மணிக்குள் சொல்கிறோம்” என்று ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்கள்.

சாலை மறியல் செய்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் கூடி இருந்துள்ளார்கள். அவர்களை கலைப்பதற்காக, காவல்துறை வெறிகொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் எத்தகைய தாக்குதல்களும் நடத்த கூடாது என்ற தார்மீக நெறிமுறைகளை எல்லாம் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது. பொதுமக்களை விரட்டி விரட்டி அடித்துள்ளார்கள்.

தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்களை வாங்கி உடனடியாக அடக்கம் செய்ய காவல் துறையால் அக்குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைக்கு உள்ளே வைப்பதற்கு இடம் இல்லாததால், இறந்த உடல்களை கொட்டும் மழையில் வெளியில் வைத்துள்ளார்கள். இவ்வளவும் மாவட்ட கலெக்டர், காவல்துறை உயரதிகாரிகள் இருக்கும் போது, அவர்கள் கண்ணெதிரிலேயே நடந்துள்ளது.

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி மக்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கம் அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தையும் காவல் துறையையும் அநியாயமான முறையில் ஆட்டுவிப்பது யாரென்று ஊர் உலகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு அறிவித்திருக்கும் இழப்பீடு போதாது. இறந்த 17 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் இலவசமாக கட்டித் தரப்பட வேண்டும். 17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதை கரைக்கவில்லை. தடியடித் தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். இது பாதிக்கப்பட்டோரை பார்த்துப் பரிகசிக்கும் இரக்கமற்ற அரசு என்பதற்கு இப்போது இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story