பெண்கள் பாதுகாப்பிற்கு உடனடி முக்கியத்துவம் தர வேண்டும்; டி.ஜி.பி. உத்தரவு


பெண்கள் பாதுகாப்பிற்கு உடனடி முக்கியத்துவம் தர வேண்டும்; டி.ஜி.பி. உத்தரவு
x
தினத்தந்தி 4 Dec 2019 8:47 AM IST (Updated: 4 Dec 2019 8:47 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்பிற்கு உடனடி முக்கியத்துவம் தர வேண்டும் என தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சென்னை,

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பிரியங்கா ரெட்டி, கற்பழித்து கொல்லப்படுவதற்கு முன்பாக அவர் மாயமானபோது, அது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய வந்தபோது, அவர்கள் அந்த பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற போலீஸ் நிலையத்துக்கும், கிராமப்புற போலீஸ் நிலையத்துக்கும் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதி எந்த போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்குள் வருகிறது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  இதெல்லாம் நடக்காமல் உடனடியாக புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து, பிரியங்கா ரெட்டியை தேடும் வேட்டையை முடுக்கி விட்டிருந்தால் அவர் ஒரு வேளை உயிருடன் மீட்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணமான சம்சாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி குமார், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய போலீஸ் நிலைய ஏட்டுகள் வேணுகோபால் ரெட்டி, சத்தியநாராயணா கவுடு ஆகிய 3 பேரும் பணியில் அசட்டையாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனர் நிருபர்களிடம் தெரிவித்தார். புகார்கள் வருகிறபோது எந்த போலீஸ் நிலையத்தின் எல்லைக்குள் வருகிறது என்று பார்க்காமல், வழக்கு பதிவு செய்யுமாறு சைபராபாத் போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தினை கவனத்தில் கொண்டு தமிழக டி.ஜி.பி. திரிபாதி, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஆபத்து என அழைப்பு வந்தால், காவல் துறையினர் உடனடியாக உதவ வேண்டும். புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்கக்கூடாது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த வேண்டும்.  காவலன் கைப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காவலன் செயலி குறித்து பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். ஆபத்து நேரிடும்போது காவல்துறையின் உதவியை நாட ஊக்குவிக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும். காவல்துறை அதிகாரிகள் 10ந்தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Next Story