பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 11-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது


பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் 11-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது
x
தினத்தந்தி 4 Dec 2019 11:15 PM GMT (Updated: 4 Dec 2019 10:18 PM GMT)

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வருகிற 11-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து, அதில் பூமி கண்காணிப்பு, வானிலை, விமானம், கப்பல் மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள் களை தயாரித்து அவற்றை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது பூமியை கண்காணிப்பதற்காக ‘ராடார் இமேஜிங் சாட்டிலைட்’ என்று அழைக்கப்படும் செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

புவிவட்டப்பாதை

பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ‘ரீசாட்-2 பிஆர்1’ செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வருகிற 11-ந்தேதி மாலை 3.25 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்படுகிறது. இந்தநிலையில் தற்போது எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இறுதிகட்டப்பணியான ‘கவுண்ட் டவுன்’ வருகிற 9-ந்தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 50-வது ராக்கெட்டாக இது திகழ்கிறது. மோட்டார்களில் திட எரிபொருள் நிரப்பப்படாமல் அனுப்பப்படும் 16-வது ராக்கெட்டும் இது தான். அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டில் இது 75-வது ராக்கெட்டாகும். அத்துடன் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 37-வது ராக்கெட் என்ற பெருமையையும் இது பெறுகிறது. பூமியில் இருந்து 576 கி.மீ. தூரத்தில் உள்ள புவிவட்டப்பாதையில் 37 டிகிரியில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட உள்ளது.

9 வணிக செயற்கைகோள்கள்

இந்த ராக்கெட்டில் இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள்கள் வீதம் 3 செயற்கைகோள்களும், அமெரிக்காவை சேர்ந்த 6 செயற்கைகோள்களும் என மொத்தம் 9 செயற்கைகோள்கள் வணிக ரீதியிலாக விண்ணுக்கு அனுப்பப்படும். ராக்கெட் ஏவுவதை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் இஸ்ரோவின் அதிகாரபூர்வ ஆன்லைன் முகவரியில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Next Story