கைலாசா என்பது ஒரு இடமில்லை ; கடவுள் நிறைந்திருக்கும் அண்ட சராசரம் - நித்யானந்தா விளக்கம்


கைலாசா என்பது ஒரு இடமில்லை ; கடவுள் நிறைந்திருக்கும் அண்ட சராசரம் - நித்யானந்தா விளக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2019 6:28 AM GMT (Updated: 5 Dec 2019 6:28 AM GMT)

கைலாசா நாடு தொடர்பான பேச்சு பரபரப்பாக இருக்கும் நிலையில் அதுபற்றி முதல் முறையாக வாய் திறந்துள்ளார் நித்யானந்தா... கைலாசா என்பது ஒரு இடமில்லை என்றும் அது இறைவனை நம்பும் அண்ட சராசரம் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் பிறந்த நித்யானந்தா இன்று இன்டர்போல் போலீசாருக்கு சவால் விடும் வகையில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு நபராகவே மாறியிருக்கிறார். 

ஆள்கடத்தல், பாலியல் வன்முறை என தொடர் புகார்கள் இருக்கும் நிலையில் இந்துக்களுக்காக கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். 

இந்த சூழலில் தான் நித்யானந்தா சார்பில் கடந்த 2018ல் ஐ.நா.விற்கு 46 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இந்து மதத்தின் வளர்ச்சி, ஆதி சைவ மரபை பின்பற்றுவோருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் இவை எல்லாம் பட்டியலிட்டு விளக்கப்பட்டுள்ளது. 

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளால் இந்து மதத்திற்கு பேராபத்து சூழ்ந்துள்ளதாகவும், அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளால் இங்கு ஆதி சைவ மரபை பின்பற்றுவோர் அபாயத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கும் ஆபத்துகள் அதிகம் என்றும் விலாவரியாக விளக்கப்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் இந்து மதத்திற்கு உட்பட்ட ஆதீனங்களும், மடங்களும் பெரும் சிக்கலை சந்தித்து வருவதாகவும் நித்யானந்தா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நித்யானந்தாவின் இதுபோன்ற செய்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மன்னார்குடி ஜீயர், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இத்தனை சர்ச்சைகளுக்கும் அடித்தளமாக இருக்கும் ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் வீடியோ ஒன்றை நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் கடத்தப்படவில்லை என்றும், விருப்பத்தின் பேரிலேயே இங்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நேரில் ஆஜராகுமாறு 2 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தங்களுக்கு ஆபத்துகள் இருப்பதாகவும், அதனால் வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆஜராவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

இந்த சூழலில் ஆன்லைனில் சத்சங்கம் நிகழ்ச்சியில் இன்று முதல் முறையாக கைலாசா நாடு பற்றி வாய் திறந்துள்ளார் நித்யானந்தா. எந்த நாட்டுக்கும் எதிரானவன் நான் இல்லை, கைலாசா என்பது ஒரு இடமில்லை, அது கடவுள் நிறைந்திருக்கும் அண்ட சராசரம் என விளக்கம் அளித்துள்ளார். 

எங்கிருந்தாலும் இறைவனை தரிசிக்கலாம் என்பதே கைலாசாவின் திட்டம் என குறிப்பிட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், தனி சின்னங்கள், பாஸ்போர்ட், தனி கொடி என உருவாக்கியது ஏன்? என்ற கேள்வியே இங்கே பிரதானமாக எழுகிறது. 

அன்றாடம் ஒருமுறை ஆன்லைனில் சத்சங்கம் நடத்தும் நித்யானந்தா, இனி 3 முறை தரிசனம் தருவதாகவும், யோகா, க்ரியா, ஞான தத்துவங்களை பற்றி இனி அதிகம் பேசுவேன் என்றும் அதிரவைத்துள்ளார். 

Next Story