ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அதிமுகவினர் மரியாதை


ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அதிமுகவினர் மரியாதை
x
தினத்தந்தி 5 Dec 2019 12:07 PM IST (Updated: 5 Dec 2019 12:07 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்  மலரஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி  அமைதியாக பேரணி நடத்தினர்.  

 இதையொட்டி அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

பின்னர், ஜெயலலிதா நினைவிடத்தில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். 

ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். 

 தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

Next Story