மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : சோதனைக்கு பின்னரே - பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் : சோதனைக்கு பின்னரே - பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 6 Dec 2019 2:09 AM IST (Updated: 6 Dec 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மிரட்டலைத்தொடர்ந்து கபாலீசுவரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் நேற்று மாலை வழக்கம்போல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். ஆன்மிக சொற்பொழிவும் நடந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் செயல் அலுவலர் அலுவலகத்துக்கு நேற்று மாலை ஒரு கடிதம் வந்தது. அதில் மயிலாப்பூர் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் ஒருவர் தனது பெயர் மற்றும் முகவரியுடன் மிரட்டல் விடுத்து இருந்தார்.

அந்த கடிதத்தில் ‘எஸ்.எம். முகமது அனீப் பார்கவி ஆகிய நான், அப்துல்லாகான் சாஹீப் மஜித் நிர்வாகி, நான் நேரடியாக சவால் விடுக்கிறேன். அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டினால், நான் உங்கள் கோவில்களை இடித்து மசூதி கட்டுவேன் என்னிடம் உள்ள வெளிநாட்டு வெடிகுண்டை வைத்து கோவிலை தகர்த்துவிடுவேன்’ என அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மர்ம கடிதம் குறித்து உடனடியாக கோவில் இணை-ஆணையர் காவேரி, மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக மயிலாப்பூர் துணை- ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி-ஆணையர் நெல்சன் ஆகியோர் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கோவில் பின்புறம் உள்ள வாசல் மூடப்பட்டு, ராஜகோபுரம் வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கொண்டு வந்த பேக் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கோவில் முழுவதும் சுற்றிவந்து மோப்பம் பிடித்தது. சந்தேகப்படும் படியாக எதனையும் கவ்வி பிடிக்கவில்லை. சோதனை இரவு வரை நீடித்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக கோவில் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் இது வெறும் புரளி என்றுதான் தெரியவருகிறது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்று சென்னையில் 5 கோவில்களில் மர்ம கடிதம் வந்து உள்ளது. இதுகுறித்து கடிதம் அனுப்பியவர் முகவரியிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியதாக கூறப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.எம்.முகமது அனீப் பார்கவி, தன்னுடைய பெயரில் எழுதப்பட்ட கடிதம் போலியானது என்று மறுப்பு தெரிவித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இரவு மனு கொடுத்தார். தனக்கும் அந்த கடிதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தனக்கு வேண்டாதவர்கள் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தனது பெயரை குறிப்பிட்டு அந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் அரபி மொழியில் கையெழுத்து போடுவேன் என்றும், தமிழில் கையெழுத்து போடமாட்டேன் என்றும், எனவே தமிழில் கையெழுத்து போட்டு வந்த அந்த மிரட்டல் கடிதத்துக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மயிலாப்பூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதாகவும், போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்ததாகவும், மேலும் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த போலி கடிதத்தை அனுப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story