திருட வந்த இடத்தில் போதையில் தூங்கிய திருடன்: ரோந்து போலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம்


திருட வந்த இடத்தில் போதையில் தூங்கிய திருடன்: ரோந்து போலீசாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 8:57 PM GMT)

திருட வந்த இடத்தில் போதையில் தூங்கிய திருடன் ரோந்து போலீசாரிடம் சிக்கினான்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் ஒருவர் படுத்து நன்றாக தூக்கிக்கொண்டு இருந்தார். அவர் அருகே இரும்பு கம்பி, டார்ச் லைட் கிடந்தன.

சந்தேகப்பட்ட போலீசார் அவரை எழுப்பினர். அவர் மது போதையில் இருந்தார். அவர் தூக்கத்தையும் போதையையும் போலீசார் தெளியவைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தத்தனேரி காலனி பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி (வயது55) என்று தெரியவந்தது. அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

இவர் வீடுகளில் திருடாமல் கோவில்களில் மட்டும் திருடுவதை தொழிலாக வைத்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் கோவில்களில் திருடி வந்துள்ளதாக போலீசில் தெரிவித்தார். திருட நினைக்கும் கோவிலில் பகலில் சென்று நோட்டமிட்டு, இரவில் புகுந்து பொருட்களையும், நகை, பணத்தையும் அள்ளிச் செல்வது இவரது வாடிக்கையாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன்கோவில் உண்டியல் திருட்டு போனது. அதனை செந்தூர்பாண்டிதான் தூக்கிச் சென்று உடைத்து, அதில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 670-ஐ எடுத்து மது, விருந்து என்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் செந்தூர் பாண்டிக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க ஆசை வந்துள்ளது. இதற்காக விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள கோவில்களை நோட்டமிட்டுள்ளார்.பெருமாள் கோவிலில் இரவில் புகுந்து திருட முடிவு செய்த அவர், அதற்கு முன்னதாக மது குடித்துள்ளார். அப்படியே கோவிலுக்கு வந்த செந்தூர் பாண்டிக்கு போதை தலைக்கேறியதால் தூக்கம் கண்ணை இறுக்கியது. அதனால் சற்று கண்ணயரலாம் என்று நினைத்து கோவில் வளாகத்தில் உள்ள தூணில் சாய்ந்து குட்டி தூக்கம் போட்டார். சிறிது நேரத்தில் அவர் அப்படியே தரையில் சாய்ந்து அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது தான் ரோந்து போலீசாரிடம் செந்தூர்பாண்டி சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 500 மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story