உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு: வேட்புமனு தாக்கல் தொடங்குவதில் சிக்கல், தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு - மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு: வேட்புமனு தாக்கல் தொடங்குவதில் சிக்கல், தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு - மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:45 AM IST (Updated: 6 Dec 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு அறிவிக்கப்பட இருப்பதையொட்டி, வேட்புமனு தாக்கல் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், ஊரக பகுதிகளுக்கு மட்டுமே இரண்டு கட்டங்களாக இம்மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளை கொண்ட நகர்ப்புறங்களுக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளை பொறுத்தவரை, 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 12,524 ஊராட்சி தலைவர் பதவிகள், 99,324 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன.

இந்த பதவிகளுக்குத்தான் இரண்டு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு வரையறை பணிகள் முடிவடையாத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியான தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த 9 மாவட்டங்களையும் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்ததை நடத்த விருப்பம் தெரிவித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த குழப்பமான நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள், வேட்புமனுக்களை வாங்கலாமா? என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, டெல்லியில் இருந்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் சில மாவட்ட கலெக்டர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வேட்புமனுக்களை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருங்கள்” என்று கூறியதாக தெரிகிறது.

எனவே, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. அதுவும் குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளிவந்த பிறகே, இதற்கு முடிவு கிடைக்கும்.

Next Story