உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை சரத்குமார், என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு


உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை சரத்குமார், என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Dec 2019 5:00 AM IST (Updated: 8 Dec 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் சரத்குமார், என்.ஆர்.தனபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழகத்தில் கிராம அளவில் மட்டும் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிக்கான வியூகங்களை அ.தி.மு.க. வகுக்க தொடங்கி விட்டது. உள்ளாட்சி தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக கூட்டணி கட்சிகளை நேற்று முன்தினம் அ.தி.மு.க. அழைத்திருந்தது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. கட்சி தலைவர்கள்-நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் ஆலோசனை கூட்டத்துக்கு அ.தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது.

முந்தைய கூட்டத்தில் பங்கேற்காத சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மூவேந்தர் முன்னணி கழக இணை பொதுச்செயலாளர் பிரபு ஆகியோர் நேற்று அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் நிலவரம், களப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு கட்சிகளுடனும் தனித்தனியாகவே ஆலோசனை நடந்தது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், “ச.ம.க. சார்பில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்த பட்டியலை அ.தி.மு.க. தலைமையிடம் சமர்ப்பித்திருக்கிறோம். விரும்பும் தொகுதிகள் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். இதுகுறித்து அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடனும் கலந்துபேசுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி-தோல்வி சகஜம். தமிழகத்தில் தற்போது சிறப்பான ஆட்சி நடக்கிறது. எனவே அத்தகைய ஆட்சிக்கு நிச்சயம் மக்கள் வெற்றியையே பரிசளிப்பார்கள்” என்றார்.

என்.ஆர்.தனபாலன் கூறுகையில், “எங்கள் கட்சிக்கு தகுந்தாற்போல இடங்கள் ஒதுக்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமை உறுதியளித்திருக்கிறார்கள். வெற்றிவாய்ப்புள்ள இடங்கள் பட்டியல் நாளை (இன்று) சமர்ப்பிக்க இருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடந்தது” என்றார்.

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. எனவே இன்னும் ஓரிரு நாளில் அழைப்பின் பேரில் அக்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story