தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் அதிக அளவு மழை பெய்துள்ளது.
வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர்ந்து மழை கிடைத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை உள்ளிட்ட பெரிய அணைகள் நிரம்பி உள்ளது.
தற்போது ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை - புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
கோயம்பேடு வடபழனி, கிண்டி, ஆலந்தூர், தேனாம்பேட்டை, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, மாதவரம், புழல், அம்பத்தூர், அண்ணாநகர், நொளம்பூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ் சேரி பகுதிகளில் அதிகாலையில் 1 மணி நேரம் மழை பெய்தது.
காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர் , அரியலூர் , விருது நகர் , உ ள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இது பற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று அதிக பட்சமாக 4 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி மேகங்கள் திரண்டு வருவதால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் கன மழை பெய்யக் கூடிய அளவுக்கு அறிகுறிகள் இல்லை.
தென்மாவட்டங்கள் இலங்கைக்குள் கிழக்கே மேலடுக்கு சுழற்சி தற்போது உருவாகி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story