மக்கள் பேராதரவை தருவார்கள்: ‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார்’ தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்


மக்கள் பேராதரவை தருவார்கள்: ‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார்’ தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Dec 2019 5:00 AM IST (Updated: 9 Dec 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. சந்திக்க தயாராக இருக்கிறது என்றும், மக்கள் பேராதரவை தருவார்கள் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஜெகத்ரட்சகன், கனிமொழி உள்பட எம்.பி.க்களும், எ.வ.வேலு, கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட எம்.எல்.ஏ.க்களும், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஜெ.அன்பழகன் உள்பட மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

உள்ளாட்சி தேர்தலை ஜனநாயகரீதியில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள ‘பொன்னான வழிகாட்டுதல்கள்’ என இக்கூட்டம் வரவேற்கிறது. மேலும், 3 வருடங்களுக்கும் மேலான தி.மு.க.வின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது எனவும், உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்து தி.மு.க. மீது போலி குற்றச்சாட்டினை முன்வைத்து பொய்ப்பிரசாரம் செய்யும் அ.தி.மு.க. அரசுக்கு தக்கபாடம் கற்பித்துள்ள தீர்ப்பு எனவும் இந்த கூட்டம் கருதுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றை சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாக செய்து முடித்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொள்வது என்றும் இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

3 வருடங்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டு கொள்கைகளை சட்டப்படி கடைப்பிடிக்காமல், மாநில தேர்தல் ஆணையத்தை தனது எடுபிடியாக செயல்பட வைத்து, ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வரிசையாக கண்டனங்களை வாங்கி கட்டிக்கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தையும் அ.தி.மு.க. அரசின் முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் செய்கின்றனர்.

தாம்செய்த குற்றத்தை மற்றவர் தலையில் சுமத்தி தப்பித்திடும் தீய நோக்கத்துடன், “உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக தி.மு.க. காரணம்” என்று சொல்லும் கடைந்தெடுத்த பொய் பிரசாரத்துக்கும், 6.12.2019 அன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உள்ளாட்சி தேர்தல் எப்படியாவது தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடனும், அலட்சிய மனப்பான்மையுடனும், 7.12.2019 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கும் இந்த கூட்டம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல், தங்களுடைய குறைகளையும், தேவைகளையும் பிரதிபலிக்கும் வாய்ப்பின்றி, வாய்ப்பூட்டு போடப்பட்டு, அல்லல்களுக்கு ஆளாகிவரும் தமிழக மக்கள், தி.மு.க.வின் பக்கம் உறுதியாக நின்று பேராதரவினை நல்கிடுவார்கள்.

எனவே உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது வந்தாலும், ‘மக்கள் குரலே மகேசன் குரல், மக்கள் என்றும் நம் பக்கமே’ என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேர் எதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட தி.மு.க. தயாராக இருக்கிறது என்று மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் இந்த கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வந்த போது, அவருக்கு ஜெகத்ரட்சகன் எம்.பி. பூங்கொத்து வழங்கியும், சால்வை அணிவித்தும் வரவேற்றார்.    

Next Story