வெங்காய விலை பற்றி தமிழக அரசுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை மு.க.ஸ்டாலின் அறிக்கை


வெங்காய விலை பற்றி தமிழக அரசுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2019 5:30 AM IST (Updated: 10 Dec 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

மற்ற மாநிலங்கள் வெங்காய விலை நெருக்கடியை சமாளித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு வெங்காய விலை உயர்வு குறித்து கொஞ்சம் கூட கவலையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கண்ணீர் வருகிறது

வெங்காயத்தை உரிக்கும்போதுதான் முன்பெல்லாம் கண்ணீர் வரும். இப்போது வெங்காயம் விற்கும் விலையை நினைத்துப்பார்த்தாலே கண்ணீர் வருகிறது. தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போல, வெங்காயமும் இன்றைக்கு கிடுகிடு விலையை வேகமாக எட்டிப்பிடிக்கும் பொருள்களுள் ஒன்றாக ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டுவிட்டது.

இன்றைய விலை நிலவரத்தில் தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோலுக்கு அடுத்து வெங்காயத்தையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன. ஆம்லெட்டில் வெங்காயத்தை விலக்கிவிட்டு, முட்டைக்கோஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன கடைகள். வெங்காயம் பயன்படுத்துவதால் பிரியாணி விலையும் கூடிவிட்டது.

கடலூரில் 2 நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசுப் பொருளாக கொடுத்து வாழ்த்திச் சென்றுள்ளார்கள். ஆட்டோவில் ஏறிய ஒருவர், பணத்துக்கு பதிலாக வெங்காயம் கொடுத்ததாக வாட்ஸ்அப்பில் தகவல் வருகிறது. வைர நகைகள் மாதிரி, வெங்காயத்தில் நகை செய்வதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். வெங்காயம் வாங்குற அளவுக்கு நீங்க பணக்காரங்களா? என்கிறது ஒரு மீம்ஸ். இப்படி வானத்தை தொட்டுவிட்டது, வெங்காயத்தின் விலை.

நகைச்சுவை காட்சி அல்ல...

இவை நாட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகள் அல்ல; நாம் கண்ணெதிரே அன்றாடம் காணும் எதார்த்தமான நிகழ்வுகளாக, உண்மைக் காட்சிகளாக இருக்கின்றன. மக்கள் தினமும் உண்ணும் உணவில் அவசியம் தவறாமல் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக மிக முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயம், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாத அபூர்வமான பொருளாகிவிட்டது.

கடந்த நவம்பர் முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 2-ந் தேதி ரூ.110 ஆக உயர்ந்தது. டிசம்பர் இரண்டாவது வாரம் ரூ.140 ஆக உயர்ந்தது. அதன் பிறகு நித்தமும் உயர்ந்து 200 ரூபாய் ஆகிவிட்டது. வெளிச்சந்தை விலைகளைச் சொல்லவே முடியாது. 230 ரூபாய் முதல் 250 வரை ஆகிவிட்டது.

தமிழக அரசால் ஏன் செய்ய முடியவில்லை?

இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனை குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை. இதெல்லாம் நம்முடைய வேலையா? என்ற அலட்சியத்தில் ஆட்சி நடத்துகிறார்களா?. இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல; மற்ற மாநிலங்களுக்கும் இதே நெருக்கடி தான் என்று முதல்-அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியைப் பெருமளவுக்கு சமாளித்துவிட்டன. தமிழகம் வழக்கம்போல, எல்லாவற்றையும் போல, போதிய அளவு வெங்காயம் வினியோகத்திற்கு செல்வதிலும், வெங்காய விலையை மக்களின் தாங்கும் சக்திக்கேற்ப கட்டுப்படுத்துவதிலும் மிகவும் பின்தங்கிவிட்டது.

இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் இருக்கிறது. வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட, அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை?.

தேர்தல் முடிவை நிர்ணயித்த வெங்காயம்

ஒரு அரசாங்கம் மனது வைத்தால், உரிய நடவடிக்கை எடுத்து தீர்க்க முடியாதா?. ஒரேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலை மாநிலம் முழுக்க நடத்துவதற்குத்தான் திறனற்றுப் போனது என்றால், வெங்காய விலையையுமா கட்டுப்படுத்திடத் திராணியற்றுப் போய்விட்டது?. இது ஏதோ சாதாரண வெங்காயம்தானே என்று ஆட்சியாளர்கள் நினைக்கக்கூடாது. கடந்த காலத்தில் தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையே, மாற்றக்கூடிய முக்கியமான அம்சமாக வெங்காயத்தின் விலைகள் இருந்துள்ளன. 1998-ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, டெல்லி யூனியன் பிரதேசத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்ததுதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கிக்கிடக்கிறது.

வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை, விலை ஏற்றங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், வினியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் தனிமைப்படுத்தப்பட்டு போய் விடுவீர்கள் என்று எச்சரிக்கை செய்வது எனது கடமை ஆகும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story