உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல்நாளில் 3,217 பேர் மனு தாக்கல்


உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல்நாளில் 3,217 பேர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 10 Dec 2019 5:30 AM IST (Updated: 10 Dec 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 3,217 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வுக்கு நேரடியாக தேர்வு நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ந் தேதி பெறுவதாக இருந்தது. ஆனால் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் வேட்புமனுக்கள் பெறுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

வேட்புமனு தாக்கல்

நேற்று தொடங்கி வரும் 16-ந் தேதி வரை வேட்புமனுக்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தங்கள் அலுவலகங்களில் வேட்பு மனுக்களை பெற தயார் நிலையில் இருந்தனர். அதேபோல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் உள்ள ஊராட்சி செயலரிடம் வேட்பு மனுக்களை பெறுவதற்காக இருந்தனர்.

ஆனால் முதல் நாள் என்பதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதில் போட்டோ போட்டி ஏற்படவில்லை. குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து 16-ந் தேதி வரை பெறப்படும் வேட்புமனுக்கள் மீது வரும் 17-ந் தேதி பரிசீலனை நடக்கிறது. தொடர்ந்து 19-ந் தேதி மனுக்களைத் திரும்பப்பெற காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

பவுர்ணமியில் வேட்புமனு தாக்கல்

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகரிகள் கூறிய தாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முறைப்படி 27 மாவட்டங்களிலும் நேற்று தொடங்கியது. பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும், ஊராட்சி அலுவலகங்களில் செயலர்களும் நேற்று காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தயார் நிலையில் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாள் என்பதால் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏதுவும் ஏற்படவில்லை. பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச் சோடியே கிடந்தன.

அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் வேட்புமனு சூடு பிடிக்கவில்லை. எப்படியும் 11-ந் தேதி (நாளை) பவுர்ணமி மற்றும் சுபமுகூர்த்த நாளாக இருப்பதால் அன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

3,217 வேட்புமனுக்கள் தாக்கல்

முதல் நாளில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,834 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 333 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு தெரிவித்தது.

Next Story