விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரமணியனை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து


விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரமணியனை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 10 Dec 2019 3:25 PM GMT (Updated: 10 Dec 2019 3:25 PM GMT)

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழரான சண்முக சுப்பிரமணியனை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, உலகின் எந்தவொரு நாடும் ஆராய்ந்து அறியாத, நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி அதிகாலை நேரத்தில் நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

இதனால் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவ பகுதியில் மெல்ல தரையிறங்க முடியாமல் போய்விட்டது.  இது இந்தியாவை மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விக்ரம் லேண்டர், தென்துருவத்தில் இருந்து 600 கி.மீ. தொலைவில் மோதி விழுந்து கிடந்தது.  விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் கடும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை.

நிலவை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, ஏற்கனவே எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டரை அனுப்பி இருந்தது.

அந்த எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் தரை இறங்க திட்டமிட்டிருந்த இடத்தை கடந்த செப்டம்பர் 17ந்தேதி கடந்து சென்றபோது, படம் எடுத்து அனுப்பியது. ஆனால் அதில் விக்ரம் லேண்டர் தெரியவில்லை.

விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து 150 கி.மீ. உயரத்தில் இருந்து அந்த படத்தை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா படம் பிடித்தபோது, அந்த பகுதியில் இருள் சூழ்ந்து, நிலவின் நிழல் இருந்ததால், அதில் விக்ரம் லேண்டர் மறைக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறினர்.

மீண்டும் அக்டோபர் 14ந்தேதி, 15ந்தேதி அந்த இடத்தை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா கடந்து சென்றபோது படங்களை எடுத்து அனுப்பியது.  கடைசியாக கடந்த மாதம் 11ந்தேதியும் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா படம் எடுத்து அனுப்பியது.

இந்த படங்கள் அனைத்தையும் நாசா தனது இணையதளத்தில் வெளியிட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட பலரும் பதிவிறக்கம் செய்து ஆராய்ந்து இருக்கிறார்கள்.  அப்படி ஆராய்ந்தவர்களில் ஒருவர்தான், தமிழக என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன்.

கடந்த செப்டம்பர் 7ந்தேதிக்கு முன்னரும், பின்னரும் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா எடுத்த படங்களை ஒப்பீடு செய்து பார்த்து ஆராய்ந்தார். அதில் செப்டம்பர் 7ந்தேதிக்கு முந்தைய படங்களுக்கும், அதற்கு பிந்தைய படங்களுக்கும் இடையே நிலவின் தென்துருவ பகுதியின் மேற்பரப்பில் சில தாக்கங்களையும், மாறுபாடுகளையும் கண்டறிந்தார்.

மேலும், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து 750 மீட்டர் வடமேற்கில் விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார்.

நவம்பர் 11ந்தேதி நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா அனுப்பிய படத்தில் விக்ரம் லேண்டர் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம், விக்ரம் லேண்டரின் பாகம் தெரிய வந்துள்ளது.  தனது கண்டுபிடிப்பு குறித்து சண்முக சுப்பிரமணியன் நாசாவுக்கு தெரியப்படுத்தினார். அத்துடன் டுவிட்டரில் பதிவுகளையும் வெளியிட்டார்.

அதை நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து சண்முக சுப்பிரமணியனின் கண்டுபிடிப்பு சரிதான் என உறுதி செய்தது.  விக்ரம் லேண்டர் விழுந்த இடம், பாதிப்பு, சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள விக்ரம் லேண்டர் சிதைவு இடங்கள் ஆகியவற்றை காட்டும் படத்தையும் நாசா வெளியிட்டது.

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியனை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story