உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை - மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ம் தேதி கடைசி நாளாகும். வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜனவரி 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தநிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்கள் நிகழாமல் தடுக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story