வேளாங்கண்ணி-திசையன்விளை அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்திய கண்டக்டர் கைது


வேளாங்கண்ணி-திசையன்விளை அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்திய கண்டக்டர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 4:00 AM IST (Updated: 12 Dec 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் இருந்து திசையன்விளைக்கு அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்திய கண்டக்டர் நேற்று கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபாட்டில் கடத்தலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடி வழியாக திசையன்விளை செல்லும் அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீகா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ்சில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பஸ்சில் இருந்த முதலுதவி மருந்துகள் மற்றும் வாகனம் பழுதுநீக்கும் உபகரணங்கள்(டூல்ஸ்பாக்ஸ்) வைக்கக்கூடிய பெட்டியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் 20 புதுச்சேரி மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக போலீசார் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அரசு பஸ் மற்றும் கண்டக்டரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசு பஸ் கண்டக்டரான ராதாபுரம் செட்டிக்குளத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஜெயக்குமார்(வயது 42) என்பவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இவர் ஊரில் உள்ள தனது கடையில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபாட்டில் கடத்தியதாக ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தற்போது அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டு உள்ளார். அரசு பணியில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story