சாதியை காட்டி பிரிக்கப்பட்ட இளம்பெண், காதல் கணவருடன் செல்ல ஐகோர்ட்டு அனுமதி மிரட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.க்கு உத்தரவு


சாதியை காட்டி பிரிக்கப்பட்ட இளம்பெண், காதல் கணவருடன் செல்ல ஐகோர்ட்டு அனுமதி மிரட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.க்கு உத்தரவு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:31 PM GMT (Updated: 11 Dec 2019 10:31 PM GMT)

சாதியை காட்டி பிரிக்கப்பட்ட இளம்பெண்ணை காதல் கணவருடன் செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதித்தது. மிரட்டி பிரித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த சண்முகராஜலிங்கம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நானும், எங்கள் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்தோம். இந்த விஷயம் தெரிந்த அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து நாங்கள் இருவரும் திருத்தங்கல் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

பின்னர் கடந்த மாதம் 7-ந்தேதி மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள எங்கள் மாமா வீட்டுக்கு சென்றோம். அவர் எங்களை பேரையூர் போலீசில் சரண் அடைய செய்தார். ஆனால் போலீசார் எங்களை மிரட்டி, வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். மேலும் எனது மனைவியை பிரித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே சாதியை காட்டி பிரிக்கப்பட்ட எங்களை சேர்த்து வைக்கவும், உரிய பாதுகாப்பு அளிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

ஆஜராக உத்தரவு

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வக்கீல் எஸ்.பி.நவீன்குமார் ஆஜராகி, ‘மனுதாரர் காதலித்து திருமணம் செய்து  கொண்ட பெண்ணை, அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். இதுதொடர்பாக அந்த பெண், மனுதாரருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்’ என்றார். அதற்கான சில ஆதாரங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரும், அந்த பெண்ணும், சம்பந்தப்பட்ட போலீசாரும் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.

காதலுடன் செல்ல அனுமதிப்பு

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகாசி போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆஜரானார்கள். அதேபோல சண்முகராஜலிங்கம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணும் ஆஜராகினர்.

அவர்களிடம் நீதிபதி விசாரித்தார். அப்போது அந்த பெண், சண்முகராஜலிங்கத்துடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் மேஜர் என்பதால் மனுதாரருடன் செல்ல நீதிபதி அனுமதித்தார். மேலும், மனுதாரர் திருத்தங்கலில் இருக்கும் வரை அவருக்கும்,  குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பேரையூர் மற்றும் திருத்தங்கல் போலீசார் மீது டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story