கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் கங்குலிக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம்


கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் கங்குலிக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 12 Dec 2019 4:38 AM IST (Updated: 12 Dec 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

கிரிக்கெட் போட்டியில் புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று கங்குலிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை பொருட் கள் விளம்பரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தின் நகல்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர், தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு பிரிவின் பொறுப்பு அதிகாரி, இந்திய சுகாதார அமைச்சகத்தின் புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு இணைச்செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஐதராபாத்திலும், திருவனந்தபுரத்திலும் நடைபெற்றபோது பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார் ஆகிய புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டதை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். பான் மசாலா என்கிற போலி பெயரில் இந்த புகையிலை பொருட்களின் விளம்பரங்கள் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன.

தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டை பின்பற்றும் பல கோடி இளைஞர்களை ஈர்ப்பதற்கு புகையிலை பொருள் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது சமூக பொறுப்பை உணர்ந்து, கிரிக்கெட் போட்டிகள் மூலம் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நடவடிக்கை

சென்னையில் வருகிற 15-ந் தேதி நடைபெறவுள்ள இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. புகையிலை பழக்கம் பல லட்சம் இளைஞர்களின் வாழ்வை சீரழித்து வருவதை தடுக்கும் வகையில் இத்தகைய விளம்பரங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாவிதமான புகையிலை பொருட்களையும் விளம்பரம் செய்வதையும், ஊக்குவிப்பதையும், ஆதரிப்பதையும் இந்தியாவில் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story