ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்துக்கு தடை கேட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு


ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்துக்கு தடை கேட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Dec 2019 11:10 PM GMT (Updated: 11 Dec 2019 11:10 PM GMT)

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், தொடராகவும் எடுக்க தடை கேட்டு ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதள தொடராகவும் இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், கவுதம்வாசுதேவ் மேனன், ஐதராபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘சட்டப்படியாக வாரிசான தன்னிடம் அனுமதி எதுவும் பெறாமல் திரைப்படங்கள், இணையதள தொடர் எடுக்கப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

புத்தகம்

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் இயக்குனர் ஏ.எல்.விஜய் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் வெளியான புத்தகத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள அந்த புத்தகத்துக்கு இதுவரை யாரும் தடை கோரவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

இதேபோல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் ஆஜரான வக்கீல் ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து சீரியல் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா குறித்து ஏற்கனவே வெளியான புத்தகத்தை தழுவியே இந்த தொடர் எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரை ரூ.25 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.

விரைவில் வெளியிடப்போகும் நிலையில், கடைசி நேரத்தில் விளம்பரத்துக்காக ஜெ.தீபா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுடன் அவர் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கவில்லை. இந்த வழக்கைத் தொடர அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story