10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 50-வது ராக்கெட்டை அனுப்பி இஸ்ரோ சாதனை
இந்தியாவின் ‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது கூடுதல் சிறப்பாகும்.
சென்னை,
விண்வெளி ஆய்வில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் பூமியை கண்காணிக்க 628 கிலோ எடை கொண்ட ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியது.
இந்த செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கப்பட்டது. இந்த 22 மணி 45 நிமிட கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 3.25 மணிக்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.
21 நிமிடங்களில் நிறைவேறியது
44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் ‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கைகோளுடன், வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களையும் சுமந்து சென்றது. ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடத்தில் ‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கைகோளை 576 கி.மீ. உயரத்தில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
அதைத் தொடர்ந்து 5 நிமிட இடைவெளியில் வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் அவற்றுக்கான இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டன. அப்படி ஒட்டுமொத்த திட்டமும் 21 நிமிடங்களில் வெற்றிகரமாக நிறைவேறியது.
வெளிநாட்டு செற்கைகோள்கள்
வெளிநாட்டு செயற்கைகோள்களில் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்களும், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா ஒரு ராக்கெட்டும் இடம்பெற்றன. அவை அனைத்தும் நியூஸ்பேஸ் இந்தியா லிட். நிறுவனத்தின் மூலம் வணிக ரீதியாக அனுப்பப்பட்டு உள்ளன.
ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் கே.சிவன், சக விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
பொன்விழா ராக்கெட்
தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட், ‘பி.எஸ்.எல்.வி. கியூ எல்’ வகையை சேர்ந்த 2-வது ராக்கெட்டாகும். மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75-வது ராக்கெட் என்பதும் கூடுதல் சிறப்பாகும். அதேபோல கடந்த 26 ஆண்டுகளில் ஏவப்பட்ட 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ற பெருமையையும் பெறுகிறது. அந்தவகையில் இது ஒரு பொன்விழா ராக்கெட் ஆகும்.
இந்த பி.எஸ்.எல்.வி. பொன்விழாவை கொண்டாடும் வகையில், கடந்த 26 ஆண்டுகளாக ஏவப்பட்ட 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் வெற்றிகரமாக ஏவப்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்களின் விவரம் மற்றும் பல்வேறு தகவல்கள் அடங்கிய பொன்விழா மலரை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வெளியிட்டார்.
48 திட்டங்கள் வெற்றி
இதுவரை ஏவப்பட்ட 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டங்களில் 48 திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் சந்திரயான்-1, மங்கள்யான், 104 விண்கலங்கள் சாதனை போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இதைப்போல கடந்த 1993-ம் ஆண்டு முதல் இதுவரை 310 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் இந்த ராக்கெட்டுகள் சுமந்து சென்றுள்ளன.
இந்தியாவின் ‘ரீசாட்-2பிஆர்1’ செயற்கைகோள், முக்கியமாக ராணுவ பயன்பாட்டுக்காக விண்ணில் அனுப்பப்பட்டு உள்ளது. நாட்டின் எல்லை பாதுகாப்பை விண்ணில் இருந்தவாறே இந்த செயற்கைகோள் உறுதி செய்யும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
பார்வையாளர்கள் பரவசம்
இந்த ராக்கெட் ஏவப்படுவதை பார்ப்பதற்காக ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் அதிகாரிகளின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள், மாணவ-மாணவிகள் என சுமார் 7 ஆயிரம் பேர் அமர்ந்து ராக்கெட் ஏவுதலை பார்வையிட்டனர். அங்கு நேற்று வானம் தெளிவாக இருந்ததால் ராக்கெட்டின் முதல் பகுதி பிரிந்து சென்றதை நன்றாக காண முடிந்தது. இது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
Related Tags :
Next Story