‘5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவப்படும்’ இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு


‘5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவப்படும்’ இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு
x
தினத்தந்தி 11 Dec 2019 11:45 PM GMT (Updated: 11 Dec 2019 11:29 PM GMT)

அடுத்த 5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைகோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 17 டன் செயற்கைகோள்கள் வணிக ரீதியிலானவை. இன்று (நேற்று) 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.

முன்னாள் தலைவர்கள்

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் தனது 26-ம் ஆண்டு பயணத்தில் 1.1 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் அளவுக்கு அதன் செயல்திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

வெற்றிகரமான இந்த பயணத்தில் இஸ்ரோவில் இதற்கு முன் பணியாற்றிய ராக்கெட் ஏவுதல் குழு, ஒட்டுமொத்த பி.எஸ்.எல்.வி. குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பங்கு உண்டு. அதனால் மாதவன் நாயர், சீனிவாசன் உள்பட இஸ்ரோவின் முன்னாள் தலைவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நினைவுகூர்ந்து பாராட்டுகிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.

சூரியனுக்கு விண்கலம்

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டின் மொத்த எடையில் 56 சதவீத எடை வெளிநாடுகளின் செயற்கைகோள்களுக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரோவின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று சொன்னாலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இதுவரை நிலவுக்கும், செவ்வாய்க்கும் செயற்கைகோள்களை கொண்டு சென்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் முடிந்தன. விரைவில் சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட உள்ளது. இதுவும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. அந்தவகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story