பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
கவர்னர் மாளிகையில் தன்னை சந்திக்க வரும் பார்வையாளர்களிடம் தமிழில் பேசி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் கவருகிறார்.
சென்னை,
கவர்னர் மாளிகையில் தன்னை சந்திக்க வரும் பார்வையாளர்களிடம் தமிழில் பேசி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் கவருகிறார். அவர்களிடம் எளிய வாழ்க்கை வாழுங்கள், அது ஊழலை ஒழிக்கும் என்று அறிவுரையும் வழங்குகிறார்.
தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, கவர்னர் மாளிகையில் மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டு வருகிறார். தமிழக கவர்னராக அவர் பொறுப்பேற்பதற்கு முன்பு, கவர்னர் மாளிகையில் குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் தனக்கு உணவு பரிமாறியவர்களிடம், நீங்கள் என்ன தண்ணீர் குடிக்கிறீர்கள்? என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கேட்டார். அதற்கு அந்த ஊழியர், நாங்கள் மாநகராட்சி வழங்கும் தண்ணீரை சுத்திகரித்து, அதனை குடிநீருக்கு பயன்படுத்துகிறோம் என்றார். இதைக்கேட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித், எனக்கும் அதேபோன்று சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே கொடுங்கள், பாட்டில்கள் வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்து விட்டார். இப்போது கவர்னர் மாளிகையில் பாட்டில் தண்ணீர் கிடையாது, அதற்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது.
மின்சார சிக்கனத்தையும் அவர் கடைபிடித்தார், கவர்னர் மாளிகையில் தேவையற்ற இடங்களில் மின் விளக்குகள் எரிவதை நிறுத்த உத்தரவிட்டார். இதன்மூலம் மின்சார உபயோகத்தை குறைத்து, மின் சிக்கனத்தை ஏற்படுத்தினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக தான் சாப்பிடும் உணவுக்கே அவர் பில் (கட்டணம்) செலுத்துகிறார். டீ குடித்தால் கூட அவரே ‘பில்’ செலுத்துகிறார். என் தேவைகளுக்கான செலவை கவர்னர் மாளிகை மீது சுமத்த மாட்டேன், நானே சமாளிப்பேன் என்று தனனுடைய தினசரி வாழ்வை மேற்கொண்டிருக்கிறார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகம் வந்து 2 ஆண்டுகளில் ஓரளவு தமிழ் பேச கற்றுக்கொண்டு விட்டார். ‘எளிமையாக வாழுங்கள், அது ஊழலை ஒழித்து விடும் இதுவே என் செய்தி’ என்று தன்னை சந்திக்க வரும் பார்வையாளர்களிடம் தமிழில் கூறி, மிக உற்சாகமாக, மகிழ்ச்சியாக உரையாடுகிறார். காலையில் புறாக்களுக்கு அரிசி போடுகிறேன்... என்றும் மழலை தமிழில் அவர் கூறுவது அனைவரையும் கவருகிறது.
Related Tags :
Next Story