திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் உள்ளதா? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம், பையூர் தாலுகாவை சேர்ந்த விஜயகுமார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து கடந்த 1989-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் பையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட தலைநகருக்கு பல கி.மீ. தூரம் பயணித்து அதிகாரிகளை சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதன்படி செய்யாறு மாவட்டத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்தது. ஆனால், இதுவரை தனி மாவட்டமாக அறிவிக்கவில்லை. எனவே, செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
திட்டம் உள்ளதா?
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்துள்ளது. ஆனால், இதுவரை தனி மாவட்டமாக அறிவிக்கவில்லை’ என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது’ என்று கருத்து கூறினர்.
பின்னர், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், ‘திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவதால், இதுபோன்ற திட்டம் அரசிடம் உள்ளதா? என்று தெரிவிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story