வாகன சோதனையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள்-நோட்டுகள் சிக்கியது வருமான வரித்துறையினரிடம் ஒப்படைப்பு


வாகன சோதனையில்   ரூ.27 லட்சம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள்-நோட்டுகள் சிக்கியது   வருமான வரித்துறையினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 9:40 PM GMT (Updated: 13 Dec 2019 9:40 PM GMT)

சென்னையில் வாகன சோதனையின்போது, ரூ.27 லட்சம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களும், நோட்டுகளும் சிக்கியது. அவற்றை வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை,

திருவள்ளூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் 10 ரூபாய் சில்லரை நாணயங்களையும், 10 ரூபாய் நோட்டுகளையும் சென்னையில் உள்ள மதுக்கடைகள், மதுபார்கள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு கமிஷன் அடிப்படையில் சப்ளை செய்து வந்தார்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு சில்லரை கொடுத்தால் இதற்கு ஆயிரம் ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் சாக்கு மூட்டைகளில் கட்டி நேற்று முன்தினம் இரவு காரில் சென்னைக்கு கொண்டு வந்தார்.

சென்னை அசோக்நகர் பகுதியில் தரமணி உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யப்பனின் காரை போலீசார் சோதனை செய்தனர்.

ரூ.27 லட்சம் பறிமுதல்

அப்போது காரில் இருந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது, அதற்குள் 10 ரூபாய் நாணயங்களும், நோட்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அய்யப்பனிடம் விசாரித்தபோது, அவர் முறையாக அனுமதி பெற்றுதான் 10 ரூபாய் நாணயங்களையும், பணத்தையும் கொண்டு வருவதாக தெரிவித்தார். இருந்தாலும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களையும், நோட்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story