4 பெண்கள் போட்டியிட விரும்பியதால் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


4 பெண்கள் போட்டியிட விரும்பியதால்    பஞ்சாயத்து தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய தேர்தல்    அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 3:20 AM IST (Updated: 14 Dec 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

தங்கச்சிமடத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு தரப்பை சேர்ந்த 4 பெண்கள் போட்டியிட விரும்பியதால் இதற்காக பிரத்தியேக ஓட்டுச்சீட்டுகளுடன் தேர்தல் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்ய முயன்றனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்கு உட்பட்டது தங்கச்சிமடம் பஞ்சாயத்து. அங்கு மொத்தம் 15,475 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தங்கச்சிமடம் ஊராட்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 பெண்கள் போட்டியிட விரும்பியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அந்த 4 பேரில் செல்வாக்கு பெற்ற வேட்பாளர் யார்? என்பதை அறிவதற்காக நேற்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அந்த சமுதாயத்தினர் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில், தங்கள் சமுதாயத்தின் சார்பில் தேர்தலில் யாராவது ஒருவர் நின்றால்தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும், அந்த வேட்பாளர் யார்? என்பதை அறிய அங்கேயே ஒரு தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்தனர். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்பிய 4 பெண்கள் புகைப்படத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டுகளை தயார் செய்தனர்.

அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

இதுபற்றிய தகவல் தெரியவந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக யாரும் செயல்படக்கூடாது என்றும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எடுத்துக்கூறி அந்த தேர்தலை தடுத்து நிறுத்தினர். அங்கு தயாராக இருந்த ஓட்டு சீட்டுகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

அதனை தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த தனியார் திருமண மண்டபத்தை போலீசார் பூட்டி சாவியை எடுத்துச்சென்றனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம் அருகே சுமைதாங்கி கிராமத்தில் இதேபோன்று கிராம மக்களில் ஒருதரப்பினர் தேர்தல் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்ய முயன்ற போது அதிகாரிகள் சென்று தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story