தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Jan 2020 2:38 PM IST (Updated: 2 Jan 2020 2:38 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து  புகார் மனு அளித்தார். 

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகாரளித்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகளை கூட அறிவிக்காமல் இருக்கிறார்கள். ஏறக்குறைய 80 சதவிகிதத்திற்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது.

சேலம் கொளத்தூரில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அதை அறிவிக்காமல் உள்ளனர். எடப்பாடியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர்.

திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக, காவல்துறை, அதிகாரிகள் துணையோடு திட்டமிட்டு சதி செய்ய முயற்சி நடக்கிறது.

விளாத்திக்குளத்தில் 3 வாக்குப்பெட்டிகளை காணவில்லை என்ற செய்திகள் வருகின்றன. துணை முதலமைச்சரின் போடி பகுதியில் இதுவரை வெற்றி நிலவரங்களை அறிவிக்கவில்லை.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட அளவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தேன்.

எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் திமுக முன்னிலையில் இருக்கிறது. ஆனால் வெற்றியை அறிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் வந்து உண்ணாவிரதம் இருப்பதா அல்லது மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்பது பிறகு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story