உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை இரவு வரை தொடரும் - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரவு வரை தொடரும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5090 ஒன்றிய கவுன்சிலர், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதற்காக இன்று எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு உள்ளது. இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடரும். வாக்கு எண்ணிக்கையில் எந்தவித முறைகேடும் இல்லை. முறையாக நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணும் ஊழியர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவது பற்றி தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார். ஊரக உள்ளாட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் என்ற திமுகவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. கட்சி பாகுபாடின்றி வெளிப்படையாக செயல்படுகிறோம். புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story