கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
சென்னை,
உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
திமுக வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்தது.
வழக்கு விசாரணையின் போது வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் பலருக்கு சான்றிதழ் வழங்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் விதிகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக நாளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரைமுருகன் , டி.ஆர்.பாலு, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் ஸ்டாலினுடன் சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story