வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் எதிரொலி: ஊராட்சி தலைவர் பதவி ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால் தா.பேட்டை ஒன்றியம் ஊருடையாப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊருடையாப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு அதே ஊரில் வசிக்கும் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த போ.விஸ்வநாதன் உள்பட 4 பேர் போட்டியிட்டனர்.
இந்த ஒன்றியத்துக்கான வாக்குப்பதிவு கடந்த 30-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் அனைத்தும், தா.பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைத்து, பூட்டி சீல் வைத்தனர்.
வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
இந்தநிலையில் ஊருடையாப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் போ.விஸ்வநாதனின் பெயர், கடந்த 23-ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதனால் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஊருடையாப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், ஊருடையாப்பட்டி ஊராட்சியில் பதிவான வாக்குகள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டன. பின்னர் அவற்றில், ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டுகள் தவிர பிற வாக்குச்சீட்டுகள் வாக்கு எண்ணும் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வேட்பாளர்கள் எதிர்ப்பு
ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டுகள் எண்ணப்படாமல், கணக்குகள் மட்டும் சரிபார்க்கப்பட்டு, அப்படியே காலி வாக்குப்பெட்டிக்குள் வைக்கப்பட்டன. பின்னர், அந்த பெட்டி வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. அப்போது, அதற்கு மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கடிதம் குறித்து அவர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த ஊராட்சி தலைவர் பதவிக்காக வாக்குகள் எண்ணுவது கூறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி பின்னர் முடிவு செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் கீரப் பாளையம் ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம், திருமுகம், இளங்கோவன், செல்லையா, கிருஷ்ணமேனன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த ஊராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை தொடங்கியது.
இந்த நிலையில் துணை வாக்காளர் பட்டியலில் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்பிரகாசம் என்பவரது பெயர் இல்லை. இதை கண்டுபிடித்த அதிகாரிகள், கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்புசெல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையை மட்டும் நிறுத்த கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
இது குறித்து கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், துணை வாக்காளர் பட்டியலில் அருள்பிரகாசம் பெயர் இல்லை. ஆனால் அதற்கு முன்பு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளோம். அவர்கள் அறிவுரையின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story