நெல்லை கண்ணன் கைதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


நெல்லை கண்ணன் கைதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2020 11:15 PM GMT (Updated: 2 Jan 2020 9:38 PM GMT)

நெல்லை கண்ணன் கைதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்நோக்கம் இல்லை

பிரதமர், உள்துறை மந்திரி குறித்து ஒருமையில் பேசுவதற்கு ஜனநாயக நாட்டில் உரிமை உள்ளது. ஆனால் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதை எப்படி ஏற்க முடியும்?. ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது என்பதால் எது வேண்டுமானாலும் பேச முடியாது. அதற்கு ஒரு வரைமுறை வேண்டும்.

நெல்லை கண்ணன் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. பா.ஜனதா அளித்த புகாரில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

பா.ஜனதா கட்சி தலைவர்களின் பேச்சு பெரிய வன்முறையை தூண்டும் வகையில் இருக்காது. மோடி, அமித்ஷா ஆகியோரை நெல்லை கண்ணன் குறிப்பிட்டு பேசுகிறார். அதுபோல் பா.ஜனதா தலைவர்கள் குறிப்பிடவில்லையே. பொத்தாம்பொதுவாக பேசுபவர்களை கைது செய்ய முடியாது. அதே சமயம் ஒருவரை கொன்றுவிடுவேன் என்று கூறுபவரை கைது செய்யாமல் இருக்க முடியாது.

தேச துரோக செயல்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. மத்திய அரசின் நிலைப்பாட்டில்தான் தமிழக அரசும் இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கோலம் போடலாம். ஆனால் வேறு ஒரு வீட்டின் முன் போடப்பட்ட கோலத்தின் முன் சி.ஏ.ஏ. வேண்டாம் என்று போட்டு பிரச்சினை செய்தது உரிமை மீறல் செயல். அதன் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார்.

அந்த பெண்ணுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் தேச துரோக செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிளவு ஏற்படுத்த முடியாது

பா.ம.க. கூட்டணியால்தான் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்வதாக பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசி உள்ளார். தனது கட்சியினரை ஊக்கப்படுத்த அப்படி பேசி இருக்கலாம். பொதுவெளியில் இதுபற்றி பேசி இருந்தால் பதில் அளிக்கலாம். ஆனால் ஒரு அறைக்குள் அவர் பேசியதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.

இதை பெரிதாக்கி அ.தி. மு.க.-பா.ம.க. கூட்டணியில் பிளவு ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அதற்கு அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் இடம் தராது.

இந்தியாவிலேயே எல்லா துறைகளிலும் சர்வ வல்லமை பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சி, உள்ளாட்சியிலும் தொடரும். வெற்றிகள் எங்களை நோக்கி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story