மாமல்லபுரம் புராதன சின்னங்களை பராமரிக்க எவ்வளவு நிதி ஒதுக்கீடு? மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தொல்லியல் சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் புராதன சின்னங்களின் பராமரிப்புக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இந்தியா - சீனா இடையிலான நல்லுறவு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், இதுதொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த அக்டோபர் மாதம் மாமல்லபுரம் வந்தனர்.
இதனால், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், பழங்கால சிற்பங்கள், கடற்கரை கோவில், மண்டபங்கள் உள்ளிட்டவை புதுப்பொலிவு பெற்றன. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரன் ஒரு கடிதம் எழுதினார்.
அதில், மாமல்லபுரத்தின் அழகை நிரந்தரமாக பாதுகாக்க தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கடிதத்தையே பொதுநல மனுவாக கருதி தலைமை நீதிபதி தாமாக முன்வந்து பொதுநல வழக்கை பதிவு செய்தார்.
கட்டிடங்களுக்கு தடை
பின்னர் இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வை விசாரிக்க உத்தரவிட்டார். அவர்கள் விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களை புனரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. துப்புரவு பணிக்காக தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 7 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 30 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
8 கி.மீ. தூரத்துக்கு ஏற்கனவே பாதாள சாக்கடைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 12 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
அதேபோல, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மாமல்லபுரத்துக்கு விடுமுறை நாட்களில் சுமார் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள 290 சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்துவிடாதபடி போலீசாரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்துக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழக டி.ஜி.பி., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மாமல்லபுரத்துக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்புக்காக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப்புலமை பெற்ற போலீசார் அங்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டு இருந்தது.
எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
இதையடுத்து நீதிபதிகள், “மாமல்லபுரத்தின் அழகை பேணி காக்க எத்தனை தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்?. தன்னார்வலர்கள் எத்தனை பேர் அங்கு பணியாற்றுகின்றனர்?.
அதேபோல தொல்லியல் சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் புராதன சின்னங்களின் பராமரிப்புக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story