நெல்லை கண்ணன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் வைகோ பேட்டி


நெல்லை கண்ணன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2020 5:15 AM IST (Updated: 3 Jan 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கண்ணன் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வைகோ கூறினார்.

நெல்லை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் புதிய, புதிய வடிவங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. தற்போது கோலப்போட்டியில் வந்து நிற்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தங்களது உரிமைகளை தெரிவிக்க சகோதரிகள் கோலம் போட்டனர். அதில் அவர்களை கைது செய்ய முயற்சி செய்வது, வழக்குப்போடுவது கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம் அடியோடு அழிக்கப்படும் நிலையில் பாசிச ஆட்சி இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதும் அதன் அடையாளம்தான். நகைச்சுவையாக பேசுகிறபோது, நமது பகுதிகளில் உலவுகிற பழமொழிகளை எல்லாம் சொல்வது நெல்லை கண்ணனுக்கு வழக்கம். அவர் ஒரு சிறந்த ஆன்மிக சொற்பொழிவாளர், இலக்கிய சொற்பொழிவாளர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது வருத்தத்தை தருகிறது. அரசு அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கொடுமையான பிரிவுகள்

நெல்லை கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பிரிவுகளை சேர்த்து இருப்பது கொடுமை. அவர் திட்டமிட்டு பேசவில்லை. அந்த நோக்கத்திலும் பேசவில்லை. வழக்கமாக நமது பகுதிகளில் பேசுகிற சாதாரண பேச்சாக பேசி உள்ளார். அதற்கு இவ்வளவு கொடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் உடல் நலம் குறைந்தவர், அவரிடம் மனிதாபிமானத்துடன் நடந்து இருக்க வேண்டும். நெல்லையில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவிடாமல் செயல்பட்டது மனசாட்சியே இல்லாத செயல்.

இவ்வாறு வைகோ கூறினார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேடைப்பேச்சு, போராட்ட முழக்கம் போன்றவற்றில் ஒருமை விளிப்பு என்பது சிலநேரங்களில் சிலருக்குத் தன்னியல்பாகவும் தவிர்க்க இயலாததாகவும் அமைந்துவிடுகிறது. நெல்லை கண்ணனின் அத்தகைய பேச்சுக்கு அவரது வயது மூப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும், அதனை யாம் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை.

சங்பரிவார்களின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாக கைதுசெய்து அவரைச் சிறைப்படுத்தியிருப்பது அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு பா.ஜ.க.வுக்கு பணிந்து பணிவிடை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இப்போக்கு வேதனைக்குரியதாகும். நெல்லை கண்ணன் மீதான பொய் வழக்குகளை திரும்பப்பெறுவதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறந்த பேச்சாளரும், சிந்தனையாளருமான நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை தரக்குறைவாக பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் தமிழக காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அமைத்துள்ளனர்.

ஜனநாயக அடிப்படையில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் காவல்துறை பா.ஜ.க.வினரின் அராஜக போக்குகள் மீது கிஞ்சித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதையெல்லாம் பார்த்தால் தமிழகத்தில் நடைபெறுவது அ.தி.மு.க. அரசா?, பா.ஜ.க. அரசா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி அரசின் பாரபட்ச அணுகுமுறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறையைத் தூண்டும் பேச்சுக்காக ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமெனில் கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டுவேன் என்று பேசிய நெல்லையைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் நயினார் நாகேந்திரன், தந்தை பெரியார் முதல் நீதிபதிகள் வரை பலரையும் இழிவுபடுத்திய பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச். ராஜா ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நமது அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிராகப் பாரபட்சமான முறையில் நெல்லை கண்ணன் கைது விவகாரத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. எனவே, உடனடியாக நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story