குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் செயலாளரிடம், மு.க.ஸ்டாலின் மனு


குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் செயலாளரிடம், மு.க.ஸ்டாலின் மனு
x
தினத்தந்தி 3 Jan 2020 3:56 AM IST (Updated: 3 Jan 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியம், சேகர்பாபு, சேகர், அரவிந்த் ரமேஷ், சுதர்சனம் ஆகியோர் நேற்று தமிழக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசனை சந்தித்து, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘இந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப்படவுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான எனது தனிநபர் தீர்மானத்தை அவையில் எடுத்துக்கொள்ள வேண்டும். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சபாநாயகர் முடிவு

இதுபற்றி சட்டசபை அதிகாரிகள் கூறியதாவது:-

சட்டசபை விதி 172-ன்படி, அவை கூடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தனிநபர் தீர்மானம் தொடர்பான நோட்டீசை அளித்திருக்க வேண்டும். ஆனால் 6-ந்தேதி சட்டசபை கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

மு.க.ஸ்டாலின் 2-ந் தேதி தான் (நேற்று) தனிநபர் தீர்மானத்தை அளித்துள்ளார். எனவே இது சட்டசபை விதிக்கு பொருந்தாமல் உள்ளது. அதுகுறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்கப்படுமா? என்பது கேள்விக்குறி தான். என்றாலும், சபாநாயகரே இறுதி முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பதிலுரை

தமிழக சட்டசபையில் 6-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என்பதை முடிவு செய்யும்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டு வரப்படும் தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். கூட்டத்தொடரின் இறுதி நாளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நடந்த விவாதத்துக்கு முதல்-அமைச்சர் பதில் அளித்து உரையாற்றுவார்.

இந்த கூட்டத்தொடரில் 6 அவசர சட்டங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

Next Story