திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மந்தம் அடிப்படை வசதிகள் இல்லாததால் பணியாளர்கள் விரக்தி


திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மந்தம் அடிப்படை வசதிகள் இல்லாததால் பணியாளர்கள் விரக்தி
x
தினத்தந்தி 3 Jan 2020 4:21 AM IST (Updated: 3 Jan 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்தது. உணவு உள்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் தேர்தல் பணியாளர்கள் விரக்தி அடைந்தனர்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூண்டி, கடம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய ஒன்றியங்களுக்கு கடந்த மாதம் 27-ந்தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது. வில்லிவாக்கம், புழல், மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஆகிய 6 ஒன்றியங்களுக்கு 30-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடந்தது. இந்த 2 கட்ட தேர்தலிலும் மொத்தம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 801 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இந்த வாக்குகளின் எண்ணிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் 14 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணியில் 5 ஆயிரத்து 953 பணியாளர்கள் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பெட்டிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களின் முன்னிலையில் ‘சீல்’ உடைக்கப்பட்டது.

உணவின்றி தவிப்பு

ஒரே நேரத்தில் 4 பதவிகளுக்கு தேர்தல் நடந்ததால், 4 நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. எனவே வாக்குகளை நிறங்களுக்கு ஏற்ப பிரித்து கட்டும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணி, பல மையங்களில் மதியம் வரை நீடித்தது. இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே சோழவரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஊழியர்களுக்கு காலை உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதே நிலைமை பல மையங்களில் இருந்தது. இதனால் பசியால் தேர்தல் பணியாளர்கள் சிரமப்பட்டனர். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர்கள் உணவு வழங்கினால்தான் ஓட்டு எண்ணிக்கையை தொடங்குவோம் என்று கூறிவிட்டனர்.

இதன் காரணமாகவும் வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் உணவு வரவழைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. இந்த சூழ்நிலையில் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னேரி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர். பின்னர் மதிய உணவு வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மந்தம்

பல மையங்களில் போதிய கழிப்பறை வசதி, மின் விசிறி வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தேர்தல் பணியாளர்கள் அவதியுற்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இதே நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்கு எண்ணும் பணி மந்த கதியிலேயே நடந்தது.

இதனால் வெற்றி பெற்றவர்களின் முன்னணி நிலவரத்தை அறிய மாலை 6 மணி தாண்டிவிட்டது. இரவு 7 மணிக்கு மேல்தான் வெற்றி பெற்ற வேட்பாளரின் விவரம் ஒவ்வொரு ஒன்றியமாக அறிவிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த அவர்களது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல இடங்களுக்கு வேட்பாளர்கள் வெற்றி விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது.

3 அடுக்கு பாதுகாப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள், முகவர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். யாரும் செல்போனை உள்ளே எடுத்து வர போலீசார் அனுமதிக்கவில்லை.

வாக்கு எண்ணும் பணி சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. பதற்றம் இருந்த வாக்கு எண்ணும் மையங்களில் கலவரத்தை தடுக்கும் வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கண்ணீர் புகை குண்டு துப்பாக்கிகளையும் போலீசார் தயார் நிலையில் வைத்திருந்தனர். தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனைத்து மையங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

வாக்குப்பதிவு மையங்களுக்கு முன்பு, அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் அரசியல் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

Next Story