வாக்கு எண்ணிக்கையின்போது செல்லாத ஓட்டுகளால் ருசிகரம் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியை நினைவுபடுத்தியது
திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, இருந்த செல்லாத ஓட்டுகள் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியை நினைவுபடுத்தியது.
திருச்சி,
நடிகர் வடிவேல் நடித்த ஒரு திரைப்படத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில், வாக்குச்சாவடியில் ஓட்டளித்து விட்டு வரும் நபர் ஒருவரை பிடித்து யாருக்கு வாக்களித்தாய் என வடிவேல் கேட்பது உண்டு.
அப்போது அந்த நபர் உனக்கு தான் ஒட்டுப்போட்டேன் என அடித்து சொல்வார். அதற்கு முன்பு மற்றொரு வேட்பாளரிடம் அவருக்கு தான் ஓட்டுப்போட்டேன் என அந்த நபர் கூறுவது உண்டு. 2 பேரிடம் வாங்கிய பணத்திற்கு ஆளுக்கு ஒரு ஓட்டை குத்தியதாக அந்த நபர் கூறுவது உண்டு. இந்த நகைச்சுவை காட்சியை நினைவுபடுத்துவது போல ஓட்டுச்சீட்டுகளில் சில வாக்காளர்கள் 2 பேருக்கு ஓட்டளித்திருந்ததை திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது காணமுடிந்தது. இந்த ருசிகரம் பற்றிய விவரம் வருமாறு:-
செல்லாத ஓட்டுகள்
திருச்சி அருகே பேரூர் காவேரி என்ஜினீயரிங் கல்லூரியில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஒரு அறையில் எண்ணப் பட்டது.
இதில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை தவிர செல்லாத ஓட்டுகள் தனியாக பிரிக்கப்பட்டன. அந்த ஓட்டுச்சீட்டுகளை தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு அதன்பின் பகுதியில் செல்லாது என முத்திரை குத்தி அந்த சீ்ட்டில் கையெழுத்திட்டனர்.
2 பேருக்கு முத்திரை...
செல்லாத ஓட்டுச்சீட்டுகளில் பல, 2 பேருக்கு முத்திரை குத்தப்பட்டிருந்தது. சிலர் வேட்பாளரின் பெயர் அல்லது சின்னத்தில் பேனாவால் ‘டிக்’ அடித்து இருந்ததையும், சிலர் தங்களது கையெழுத்திட்டிருந்ததையும் காணமுடிந்தது. மேலும் சிலர் சின்னத்திற்கு நேராக விரல் ரேகைளை பதிவு செய்திருந்தனர்.
சில ஓட்டுச்சீட்டுகள் முத்திரை குத்தப்படாமல் இருந்தது. சில ஓட்டுச்சீட்டுகள் கிழிக்கப்பட்டு கிடந்தன. ஒரு ஓட்டுச்சீட்டில் 2 வேட்பாளருக்கு முத்திரை குத்தியிருந்ததை பார்த்த போது நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி தான் அங்கிருந்தவர்களுக்கு நினைவுக்கு வந்தது.
Related Tags :
Next Story