தி.மு.க. குற்றச்சாட்டில் உண்மை இல்லை மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி பேட்டி


தி.மு.க. குற்றச்சாட்டில் உண்மை இல்லை   மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2020 5:30 AM IST (Updated: 3 Jan 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடக்கிறது என்றும், தி.மு.க. குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி சென்னையில் நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களையும் சேர்த்து மாலை 5.25 மணி நிலவரப்படி வார்டு உறுப்பினர்கள் 19,734 பேர், பஞ்சாயத்து தலைவர் 1,141, ஒன்றிய கவுன்சிலர்கள் 208 ஆகிய பதவி இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பதிவான ஓட்டுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக எடுத்து யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள்? என்பதை கட்சி முகவர்களிடம் காண்பித்த பின்னரே அவை கட்சி வாரியாக பிரிக்கப்பட்டது.

இதனால் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான முழுமையான முடிவுகளை வெளியிடுவதற்கு அதிக நேரமாகிறது.

குற்றச்சாட்டில் உண்மை இல்லை

ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக தி.மு.க. கூறிய குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை. வாக்கு எண்ணிக்கை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் இருந்தனர்.

Next Story