பிரச்சினைகளை மீறி வெற்றி பெறும் வல்லமை, மாபெரும் மக்கள் சக்திக்கு உண்டு - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
உள்ளாட்சி தேர்தலில் பிரச்சினைகளை மீறி வெற்றி பெறும் வல்லமை, மாபெரும் மக்கள் சக்திக்கு உண்டு என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி தி.மு.க.கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி.
பிரச்சனைகளை மீறி வெற்றி பெறும் வல்லமை, மாபெரும் மக்கள் சக்திக்கு உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி இருக்கின்றன. பெரும்பான்மை வெற்றியை திமுக கூட்டணிக்கு கொடுத்திருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. திமுக கூட்டணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றுவார்கள் என்பது உறுதி.
எல்லாவித அராஜகங்களையும், அடாவடிகளையும் மீறி வெற்றிபெறும் மாபெரும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்துள்ளன.
இந்தத் தேர்தலில் சில நம்பிக்கை நிறைந்த காட்சிகளும் இருந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 82 வயது மூதாட்டியும், மேலூரில் 79 வயது மூதாட்டியும், தோவாளையில் 73 வயது மூதாட்டியும் வெற்றி பெற்றுள்ளார்கள். கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவரும், வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியான பெண் ஒருவர், தான் வேலை பார்த்த ஊராட்சிக்கே தலைவி ஆனது மக்களாட்சியின் மாண்புக்கு உதாரணம் ஆகும். திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா பெற்றுள்ள வெற்றி, விளிம்பு நிலை மக்கள் அதிகாரம் பெறத் தொடங்கியதன் அடையாளம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story