குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உறுதி
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உறுதிபட தெரிவித்தார்.
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி, இயக்குனர் கவுதமன் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போராடுவோம்
ஆர்ப்பாட்டத்தில் நல்லக்கண்ணு பேசும்போது கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் அதிகம் சிறை சென்றவர்கள், தூக்கில் போடப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் தான். சுதந்திர போராட்டத்துக்கும், பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. தற்போது 2-வது சுதந்திர போராட்டத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்கள் பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை பற்றி பா.ஜ.க. அரசு சிந்திக்கவில்லை.
அரசியலமைப்பு சட்டத்தை அசைத்து பார்க்க குடியுரிமை திருத்த சட்டத்தை முன்னோட்டமாக கையில் எடுத்து உள்ளார்கள். இந்த சட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நிறைவேறி இருக்காது. அ.தி.மு.க. அரசு தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன் பேசும்போது, ‘அடுத்த 5 ஆண்டுகளில் தேர்தல் நடத்தாமல் ஆட்சியை பிடிக்கும் திட்டத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இதற்கு எதிராக சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இதன் ஒரு கட்டமாக இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவில் வசிக்கும் குடிமகனின் உரிமையை பெற போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றார்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story