ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் வந்த போது வலி ஏற்பட்டதால் வயல்வெளியில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த கிராமத்து பெண்கள் அழகான பெண் குழந்தை பிறந்தது


ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் வந்த போது வலி ஏற்பட்டதால் வயல்வெளியில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த கிராமத்து பெண்கள் அழகான பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 4 Jan 2020 3:29 AM IST (Updated: 4 Jan 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் வந்த போது கர்ப்பிணிக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து வயல்வெளியில் கிராம பெண்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கீழ்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சோனியா(23). இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சோனியா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சோனியாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்து கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு பிரசவத்திற்காக நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை நோக்கி விரைந்தது. ஆனால் வரும் வழியிலேயே சோனியா பிரசவவலியால் துடித்தார். ரகுநாதபுரம் என்ற பகுதியில் சென்றபோது சோனியாவுக்கு பிரசவவலி அதிகமானது. அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டது.

வயல்வெளியில் பிரசவம்

ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண் வலியால் துடிப்பதை அறிந்த அப்பகுதியில் வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் ஓடிவந்தனர். பின்னர் ஆம்புலன்சில் இருந்த சோனியாவை பெண்கள் மெதுவாக கீழே இறக்கி வயல்வெளிக்கு அழைத்து சென்றனர். அங்கு சேலையை சுற்றி அரண் போல் தடுப்பு ஏற்படுத்தி சோனியாவுக்கு கிராம பெண்கள் பிரசவம் பார்த்தனர்.

அப்போது அழகான பெண் குழந்தை அவருக்கு பிறந்தது. பிரசவம் சுகமாக நடந்ததால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் தாயும், குழந்தையும் நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

Next Story