கோவையில் குழந்தை ஆபாச படம் பார்த்தவர் கைது
கோவையில் குழந்தை ஆபாச படம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை,
உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம் பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.
இதையடுத்து தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்படுகிறது.
இதனிடையே இணையதளம், முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதும், பதிவிறக்கம் செய்து அதை பலருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குழந்தை ஆபாச வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரெண்டா பாசு மாடரியை விசாரித்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story