வியாபார நோக்கத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை - கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி பேட்டி


வியாபார நோக்கத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை - கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2020 3:30 AM IST (Updated: 6 Jan 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

வியாபார நோக்கத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி தெரிவித்தார்.

சென்னை,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. எம்.ரவி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

‘போக்சோ’ சட்டம் குறித்து 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஒரு கூட்டம் நடந்தது. நீதிபதி கிருபாகரன், ‘குழந்தை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிறப்பான செயல்’ என்று பாராட்டினார். இன்னும் விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள் என்றும் அவர் கூறினார்.

தற்போது கோவையில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக போலீஸ் சூப்பிரண்டுகள், காவல்துறை தலைவர்களுக்கு பட்டியல் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதனை சரியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். இப்போது ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்யப்படுவது முற்றிலுமாக குறைந்துவிட்டது.

பட்டியலில் இருப்பவர்களின் சிலருடைய ஐ.பி. முகவரி மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று காட்டுவதாக கூறி இருக்கிறார்கள். அதனால்தான் கைது நடவடிக்கையில் சற்று காலதாமதம் ஆகிறது.

இதுபோன்ற குழந்தை ஆபாச படங்கள், வீடியோக்களை எங்கு எடுத்தார்கள்? யார்? யாரெல்லாம்? இதில் தொடர்புள்ளவர்கள் என்பது குறித்து அந்த வீடியோவை கொண்டு விசாரணை நடத்த இருக்கிறோம். தமிழக குழந்தைகளின் வீடியோக்களும் அதில் வருகிறது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். இதில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்பவர்கள் பொழுதுபோக்குக்காகத்தான் செய்கிறார்கள். விசாரணையில் வியாபார நோக்கத்தில் அதை செய்திருப்பதாக கண்டறியப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

இப்போது வரை 200-க்கும் மேற்பட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மற்றவர்களை குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த வாரத்தில் (இன்று முதல்) அடுத்த பட்டியலை மாவட்டங்களுக்கு அனுப்ப உள்ளோம்.

சிலர் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். அதில், ‘நான் தெரியாமல் குழந்தைகள் அல்லாத பெரியவர்களின் ஆபாச வீடியோவை(அடல்ட் ஸ்டப் வீடியோ) பார்த்துவிட்டேன். என்மீது நடவடிக்கை எடுத்துவிடாதீர்கள். சமுதாயத்தில் அவமானம் ஆகிவிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். அந்த வீடியோவை செல்போனில் வைத்து இருந்தால் உடனே அழித்துவிடவேண்டும். இனிமேல் பார்க்கக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம்.

இதுவரை குழந்தை ஆபாச படங்கள் வீடியோ பார்த்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் சென்னை, திருச்சியில் தலா ஒருவர், கோவையில் 2 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story