சபாநாயகர் முன்பு கவர்னர் உரையை கிழித்து எறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க தடை


சபாநாயகர் முன்பு கவர்னர் உரையை கிழித்து எறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க தடை
x
தினத்தந்தி 8 Jan 2020 4:30 AM IST (Updated: 8 Jan 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் முன்பு கவர்னர் உரையை கிழித்து எறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை, 

சபாநாயகர் முன்பு கவர்னர் உரையை கிழித்து எறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ஜெ.அன்பழகன்:- உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 60 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. தேர்தல் முறைகேடு நடைபெறாமல் நடந்திருந்தால் 80 சதவீத வெற்றியை பெற்றிருப்போம். இந்த தேர்தலை முறையாக தி.மு.க. சந்தித்தது. தமிழகம் முதலிடம் பெற்றதாக சொல்கிறீர்கள். எதில் முதலிடம். சட்டம்- ஒழுங்கிலா?. சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எந்த ஆதாரத்தை வைத்து சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று சொல்கிறார். புள்ளி விவரத்தோடு மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது. உங்கள் ஆட்சியில் எப்படி நடந்தது, புள்ளி விவரமாக தெரிவிக்கட்டுமா?. உங்கள் மேல் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். திருப்பூரில் என்னென்ன செய்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை எல்லாம் பேசுவது என்றால் சரியான முறையாக இருக்காது. நீங்கள் உள்நோக்கத்தோடு பேசுவதை விட்டுவிட்டு, உண்மை நிலையை எடுத்துச்சொல்லுங்கள்.

சட்டம்-ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று நாங்கள் சொல்லவில்லை. மத்திய அரசு ஆய்வு செய்து கொடுத்திருக்கிறது.

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, வேறு ஒரு நோக்கத்தின் அடிப்படையிலே உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கிறார். கவர்னர் உரைக்கு நீங்கள் வாருங்கள், நீங்கள் பேசுங்கள். உங்களை பற்றி பேசுவதற்கு எங்களுக்கு அதிகமாக இருக்கிறது ஆதாரம். அதை பற்றி நாங்கள் பேசினால் தேவையில்லாத விவாதம் தான் ஏற்படும்.

(இந்த நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எழுந்து பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ப.தனபாலும் அனுமதி வழங்கினார். அவர் பேச முயன்றபோது, தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவரை ஒருமையில் பேசினார். இதனால், அமைச்சர்களும், அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து ஜெ.அன்பழகன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெ.அன்பழகனுடன் நேரடி மோதலில் ஈடுபட்டார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ஜெ.அன்பழகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால், அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து விவாதமும் நடந்தது)

சபாநாயகர் ப.தனபால்:- அவையில் நடந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். அமைச்சர் பேசுவதற்காக என்னிடம் வாய்ப்பு கேட்டார். நான் கொடுத்தேன். ஆனால், அவரை ஒருமையில் பேசுவது முறையற்ற செயல். எந்த உறுப்பினரும் இவ்வாறு பேசக்கூடாது. ஜெ.அன்பழகனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அமைச்சரை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது. மீண்டும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்:- அமைச்சர் இங்கே அனுமதி பெற்று பேசினார். அவரை தகாத வார்த்தையால் ஒருமையில் ஜெ.அன்பழகன் பேசுகிறார். அவையில் இருந்து அவரை வெளியேற்றும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

சபாநாயகர் ப.தனபால்:- அவை முன்னவர் கூறியதை நான் பரிசீலிக்கும் நிலையில் உள்ளேன்.

மு.க.ஸ்டாலின்- ஜெ.அன்பழகன் பேசும்போது, குறுக்கீடுகள் தொடர்ந்து இருந்தது. உள்ளாட்சித்துறை அமைச்சரை அவர், சொல்லக்கூடாத வார்த்தை சொன்னதாக கூறுகிறார்கள்.

மு.க.ஸ்டாலின்:- அவர் கூறியது தவறு தான். நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், அவர் கூறிய அதே வார்த்தையை அமைச்சர்கள் பலரும் இங்கே தெரிவித்தார்கள்.

சபாநாயகர் ப.தனபால்:- அப்போது மைக் கொடுக்கப்படவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. உறுப்பினர்களில் ஒரே ஒருவர் தான் பிரச்சினைக்குரியவர். அவர் தான் ஜெ.அன்பழகன். எப்போது அவையில் பேசினாலும், அவர் சொல்கின்ற கருத்துக்கு தான் பிரச்சினையே உருவாகிறது. இது அனைவருக்கும் தெரியும். தெரியாதது ஒன்றுமே கிடையாது. இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு நன்றாக தெரியும். ஆகவே, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான தகவலை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். அது இப்போது நிஜமாகிவிட்டது. நான் ஏற்கனவே சொன்னேன். கவர்னர் உரை மீது பேசியிருந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது. அதற்கு மீறி பேசும்போது தான் இந்த பிரச்சினையே உருவாகின்றது. அவர் தனிப்பட்ட முறையிலே உள்ளாட்சித்துறை அமைச்சரை விமர்சனம் செய்யும்போது தான் இந்த பிரச்சினையே உருவாகின்றது. அவர் நேரடியாக குறிப்பிட்ட காரணத்தினால் தான், அவர் எழுந்து பேசினார். யாராக இருந்தாலும் உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சியின் அடிப்படையில் தான் எழுந்தாரே தவிர வேறு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆகவே, கவர்னர் உரையிலே பேசியிருந்தால் எந்த பிரச்சினையும் எழுந்திருக்காது. ஆகவே, நீங்கள் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு மறுப்பு கருத்தை ஆளுங்கட்சியில் இருந்தும் சொல்லப்படுகிறது. அந்த உண்மைநிலை தெரிந்து அடுத்த தலைப்பிற்கு போனால் சரியாக இருக்கும். அதையே திருப்பி திருப்பி பேசி, பிரச்சினையை உருவாக்கி, அவை சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையை மாற்றி திசைதிருப்ப பார்க்கிறார் என்பது தான் என்னுடைய கருத்து.

ஓ.பன்னீர்செல்வம்:- யாராக இருந்தாலும் இந்த இடத்தில் உணர்ச்சிவசப்பட்டு தான் பேசுவார்கள். தன்மானம் சம்மந்தப்பட்டது.

சபாநாயகர் ப.தனபால்:- இன்று நடந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜெ.அன்பழகன்:- எங்கள் கட்சி தலைவர் எனக்காக வருத்தம் தெரிவித்துக்கொண்ட வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் மனம் புண்படும்படி நிலை இருந்தால் நானே வருத்தம் தெரிவிக்கிறேன்.

சபாநாயகர் ப.தனபால்:- எப்போதும் நீங்கள் இப்படித்தான் பேசி வருகிறீர்கள். உங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதன்பின்னர், தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், நேரத்தை சுட்டிக்காட்டி சபாநாயகர் ப.தனபால் அனுமதி மறுத்தார். அடுத்து அ.தி.மு.க. உறுப்பினர் குணசேகரனை மதியம் 1.15 மணிக்கு பேச அழைத்தார். அவரும் பேச தொடங்கினார். ஆனால், தனக்கு பேச வாய்ப்பு தர வேண்டும் என்று ஜெ.அன்பழகன் தொடர்ந்து அனுமதி கேட்டுக்கொண்டே இருந்தார். பின்னர், நேராக சபாநாயகர் இருக்கை அருகே வந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சபாநாயகர் ப.தனபாலும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். திடீரென ஜெ.அன்பழகன் தான் கையில் வைத்திருந்த, கவர்னர் உரையை கிழித்து சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ப.தனபால், “முறையற்ற செயலில் உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஈடுபட்டார். கவர்னர் உரையை கிழித்து என்மேல் போடுவதுபோல் போட்டுவிட்டு செல்வது போல் போகிறார். அவரை இந்த கூட்டத்தொடர் முடியும் வரை நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழியுமாறு அவை முன்னவரை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

உடனே, அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, தீர்மானத்தை முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் ப.தனபாலும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ஜெ.அன்பழகன் மீதான நடவடிக்கையை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தின் இறுதியில் அவரது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது, மீண்டும் ஒரு தீர்மானத்தை முன்மொழியுமாறு அவை முன்னவரை சபாநாயகர் ப.தனபால் கேட்டுக்கொண்டார். அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய, ஜெ.அன்பழகன் மீதான நடவடிக்கை குறைத்துக்கொள்ளப்பட்டது. அதாவது, நாளை (9-ந் தேதி) வரை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் இருந்து மட்டும் அவரை நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஜெ.அன்பழகன் இன்றும், நாளையும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாது.

Next Story