நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்: சென்னையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது


நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்: சென்னையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 5:15 AM IST (Updated: 9 Jan 2020 12:26 AM IST)
t-max-icont-min-icon

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் நிர்ணயம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று 24 மணி நேர பொது வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கத்தினர் நடத்தினர்.

தமிழ்நாட்டில் இந்த போராட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பஸ்-ஆட்டோக்கள், ரெயில் கள் வழக்கம் போல ஓடின. கடைகளும், வணிக நிறுவனங்களும் திறந்திருந்தன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. சென்னை நகரில் உள்ள முக்கிய சாலைகள் வழக்கமான பரபரப்புடனேயே காணப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக மின்வாரிய ஊழியர்கள் மட்டுமே பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 65 சதவீதம், சென்னையில் 72 சதவீதம் மின்சார ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் பல மின் கட்டண வசூல் மையங்கள் மூடப்பட்டன.

இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாகவும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. அந்த வகையில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. உள்பட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க.வின் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் கி.நடராஜன், சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் அ.சவுந்திரராஜன், ஹிந்த் மகா சபா தலைவர் ராஜா ஸ்ரீதர் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகளும், திரளான தொழிலாளர்களும் பங்கேற்றனர்.

மேலும் இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையில் அக்கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது ஒரு சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத்தினர் சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் பகுதிகளில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். தொழிற்சங்கத்தினர் போராட்டம் காரணமாக சென்னை அண்ணா சாலை நேற்று காலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

இதைப்போல வருமான வரித்துறை தலைமை அலுவலகமான ஆயக்கார் பவன் வளாகத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.துரைபாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தின் தீவிர தன்மையை உணர்ந்து, மத்திய அரசு தனது தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் இன்னும் தீவிரமடையும்’ என்றார்.

ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் வருமான வரித்துறை அலுவலகம் உள்பட மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சிம்சன் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Next Story