7 தமிழர்கள் விடுதலையில் மத்திய அரசு தேவையின்றி குறுக்கிடக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
7 தமிழர்கள் விடுதலையில் மத்திய அரசு தேவையின்றி குறுக்கிடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ந் தேதி கூடி 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்தது.
அதன் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யாதது சட்டவிரோதம் என்றும், தன்னை விடுதலை செய்யும்படி ஆணையிட வேண்டும் என்றும் கோரிதான் நளினி வழக்கு தொடர்ந்து உள்ளார். கவர்னரின் செயல்பாடின்மை குறித்த இந்த வழக்கில் மத்திய அரசு சேர்க்கப்படவில்லை.
எனவே இந்த வழக்கில் தலையிட மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. கோர்ட்டில் 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள் எதுவும் புதிதல்ல. இந்த காரணங்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்து விட்டு, அடுத்தக்கட்டத்துக்கு சென்று விட்டது.
இந்தநிலையில், நிராகரிக்கப்பட்ட அம்சங்களை மீண்டும் கோர்ட்டில் தாக்கல் செய்து 7 தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு வாதாடுவது கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதற்கும், விடுதலையை தாமதப்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படும். இது மனித உரிமைக்கும், இயற்கை நீதிக்கும் கூட எதிரான செயலாகும்.
எனவே, 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு தேவையின்றி குறுக்கிடுவதை தவிர்த்து, கோர்ட்டில் மத்திய அரசு அளித்துள்ள கடிதத்தை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story